தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.க-வினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த அனுமதி கோரி என அ.தி.மு.க-வினர் கடந்த 2 நாட்களாக அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க-வினர் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணம் என்று குற்றம்சாட்டி, திங்கள்கிழமை சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்த, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்று வருகிறது. இன்றும் அ.தி.மு.க-வினர் அவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அ.தி.மு.க உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், சபாநாயகர் அப்பாவு இன்று ஒரு நாள் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வினரின் நடவடிக்கை குறித்து பேசினார். அதில், “கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்துதான் விவாதிக்கபோகிறோம் என்று சபாநாயகர் கூறியும், அதைமீறி சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று ஆவேசமாகப் பேசினார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “ கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூன் 20-ம் தேதி ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அவையில் விரிவாக பேசினார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன்.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க அன்றைய தினம் அவையில் இருந்து தனது கருத்தை பதிவு செய்திருக்கவேண்டும்; மாறாக தேவையற்ற பிரச்னையை அவை கூடியதும் கிளப்பினார்கள். அவையின் விதிமுறைபடி கேள்வி நேரம் முடிந்த பிறகுதான், மற்ற பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவையின் விதிமுறைகளை மீறி ரகளை செய்கிறார்கள்.
கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்துதான் விவாதிக்கபோகிறோம் என்று சபாநாயகர் கூறியும், அதைமீறி சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபடுகின்றனர். மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க அவையில் இருக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி என்பது அ.தி.மு.க கண்களை உறுத்துகிறது; மனதை உறுத்துகிறது. அதை மக்களிடத்தில் இருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்னைகளை அ.தி.மு.க-வினர் கிளப்புகின்றனர். மீண்டும்.. மீண்டும் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் அ.தி.மு.க செயல்படுகிறது.
அ.தி.மு.க-வின் ஆர்ப்பாட்டத்தை குறை கூறவில்லை. ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. தனக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக்கூடாது என தடை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி” என்று அ.தி.மு.க-வை மு.க. ஸ்டாலின் சாடினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.