'எங்கள் ஆட்சியில் எதிர்ப்பே இல்லை - ஸ்டாலின் , 'உங்கள் ஆட்சியில் ஊடகமே அதிகம் இல்லை' - முதல்வர் பழனிசாமி

10 ஆண்டுகளுக்கு முன் இப்போது இருப்பது போன்ற ஊடகங்கள் இல்லை

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையிலே நிறைவேற்ற நிபுணர் குழுவை அமைத்து அதன் மூலமாக நிறைவேற்ற, தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினுடைய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுடைய நலனை மையமாக வைத்துதான் தீட்டப்படுகிறது. மக்களும் தங்களுடைய சுதந்திரமான கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். அதேபோல், மக்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்றக்கூடிய அரசியல் கட்சிகளுக்கும் அதுகுறித்த கருத்துகளை எடுத்துச்சொல்லவும், ஆய்வு நடத்தவும் எல்லாவித உரிமையும் உண்டு.

குறிப்பாக, 8 வழிச்சாலை திட்டம் குறித்து கருத்துகளே சொல்லக்கூடாது என்று காவல்துறை வாய்பூட்டு போடக்கூடிய வகையில் நடந்து கொள்கிறது. அத்திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பாமகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், அவருடைய நாடாளுமன்ற தொகுதிக்கே சென்று மக்களைச் சந்தித்து குறைகளை கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அவர் தடுக்கப்பட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி, அங்கு இருக்கக்கூடிய மக்களை சந்திக்கச் சென்ற நேரத்தில் அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரனும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், செய்தி சேகரிக்கச் சென்ற தீக்கதிர் நாளிதழின் நிருபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதையெல்லாம் தாண்டி, நள்ளிரவில் விவசாயிகளை வீடு புகுந்து கைது செய்யக்கூடிய நிலையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜனநாயக முறையில் போராடினால் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்பது தான் என்னுடைய கேள்வி. மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு திட்டம் வருகிறது என்றால், அந்த திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பினை வழங்கிட வேண்டும். எனவே, அதைத் தடுப்பதற்கு அரசுக்கு என்ன நிர்பந்தம்? என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையிலே நிறைவேற்ற நிபுணர் குழுவை அமைத்து அதன் மூலமாக நிறைவேற்ற, தமிழக அரசு முன்வர வேண்டும்.

சர்வாதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று மனப்பால் குடித்த அரசுகள், மண்ணில் வீழ்ந்திருக்கக்கூடிய வரலாற்றை தான் பெற்றிருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தினுடைய தனிச் சிறப்பே சுதந்திரமான பேச்சுரிமையும், எழுத்துரிமையும் தான் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். கைது செய்வதாலும், அடக்குமுறையாலும் எதையும் சாதித்து விட முடியாது. எனவே இந்தப் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லவில்லை. திமுக ஆட்சியில், சாலைகள் போடப்பட்ட போது, முறையாக நிலங்கள் கைப்பற்றப்பட்டது. அப்பொழுது மக்களிடத்திலே இந்த எதிர்ப்பு கிடையாது. ஆனால், இப்பொழுது மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “10 ஆண்டுகளுக்கு முன் இப்போது இருப்பது போன்ற ஊடகங்கள் இல்லை. ஊடகங்கள் அதிகளவில் அப்போதே இருந்திருந்தால் மக்களின் எதிர்ப்புகள் வெளியே தெரிந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close