அண்னா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்தும் சட்டப்பேரவையில் முதலமைசர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் ஜனவரி 6-ம் தேதி முதல் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இந்த சம்பவத்தில் கைதான மட்டுமில்லாமல், ஞானசேகரன் போனில் பேசிய அந்த நபர் யார் என்று கேள்வி எழுப்வும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் ‘யார் அந்த சார்’ என்று பேட்ஜ் அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், தொடர்ந்து, ‘யார் அந்த சார்’ என்று பேட்ஜ் உடன் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க நிர்வாகி இல்லை, தி.மு.க அனுதாபி மட்டுமே என்று மு.க. ஸ்டாலின் கூறினார். மேலும், யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்றும் அ.தி.மு.க உறுப்பினர்கள் ‘யார் அந்த சார்’ என்று பேட்ஜ் அணிந்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அவை முன்னவர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு இருவரும் இடையில் பேசினார்கள்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே நடந்த விவாதத்தை அப்படியே இங்கே தருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்.
எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது.
முதலமைச்சர்: எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.
எடப்பாடி பழனிசாமி: தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா?
சபாநாயகர் அப்பாவு: இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லைவ் செய்ய முடியவில்லை. DD அனுமதியின்றி உள்ளே வந்தபோதும் அவர்களை வெளியே அனுப்பினோம். இது குறித்து ஏற்கனவே விளக்கத்தை அளித்துள்ளேன்
எடப்பாடி பழனிசாமி: ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை. சபாநாயகர் தமிழில் வாசித்த உரையாகத்தான் கருத முடிகிறது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள். ஆனால், இன்னும் ரத்து செய்யப்படவில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார். நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது.
எடப்பாடி பழனிசாமி: இந்தியா கூட்டணி கலகலத்துப் போய்விட்டது. இந்தியா கூட்டணி இனி எப்போதும் ஆட்சிக்கு வராது. நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள்.
அமைச்சர் துரை முருகன்: அவர்கள் (அ.தி.மு.க-வினர்) வெளிநடப்பு செய்யப்போகிறார்கள். அதற்காக தயாராக வந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் கட்சி நிகழ்ச்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: அது கட்சி நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சிதான்.
எடப்பாடி பழனிசாமி: “யார் அந்த சார் என்று தான் கேட்கிறோம், அதற்கு ஏன் பயப்படுகிறீர்கள்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “திரும்பத் திரும்ப தவறான தகவலைப் பேசிக்கொண்டிருந்தால் பொள்ளாச்சி விவகாரத்தை பேச வேண்டியது வரும். எந்தக் காரணத்தைக்கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டோம். அது எங்களுக்கு தேவை இல்லை.
துரைமுருகன்: இந்த விவகாரத்தில் ஏதாவது ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் என ஒரு அமைச்சர் பேசுகிறார், இது நியாயமா?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் பெறப்பட்டு 12 நாட்களுக்கு பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்த 12 நாளில் நடந்தது என்ன? யார் அந்த சார் என பேட்ஜ் அணிந்து வந்தது மலிவான அரசியல்.
எடப்பாடி பழனிசாமி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என தான் கேட்கிறோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தினம் தினம் தவறான அறிக்கைகளை நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள், நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? தவறான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் அவையில் பதிவு செய்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 12 நாட்கள் கழித்துதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகார் தந்த அடுத்த நாளே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நான் சொன்னது தவறு என்று ஆதாரம் தந்தால் நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். பொள்ளாச்சி சம்பவத்தில் தனது வாதத்தை நிரூபிக்காவிட்டால் நான் சொல்லும் தண்டனையை ஏற்கத் தயாரா?
எடப்பாடி பழனிசாமி: நான் சொன்னது தவறாக இருந்தால் நானும் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். பொள்ளாச்சி வழக்கில் 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி சம்பவம் பற்றி உண்மைக்கு புறப்பான தகவல்களை முதலமைச்சர் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.