2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுந்துள்ளார். ஆனால், சி.ஏ.ஏ-வின் விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை.
ஆங்கிலத்தில் படிக்க: As Stalin, EPS trade fireworks over CAA row, Tamil Nadu faultlines flare ahead of LS polls
மேற்கு வங்கத்தில் ஜனவரி 28-ம் தேதி ஊடகங்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஷாந்தனு தாக்கூர், சி.ஏ.ஏ சட்டம் நாடு முழுவதும் ஏழு நாட்களில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில் சி.ஏ.ஏ பற்றிய ஸ்டாலினின் சமீபத்திய விமர்சனம் வந்தது.
அதிகாரப்பூர்வ பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தில் குடியுரிமை (திருத்த) சட்டத்தை காலூன்ற விட மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையைப் பற்றிக் கொண்ட ஸ்டாலின், அப்போது பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியாக இருந்த அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ சட்டம் நிறைவேற ஆதரித்ததற்காக முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை தாக்கினார். மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவதாக பா.ஜ.க மீது குற்றம் சாட்டிய அவர், பா.ஜ.க-வின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக அ.தி.மு.க நயவஞ்சக நாடகங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
சி.ஏ.ஏ பிரச்னை தமிழ்நாட்டில் ஒரு விரும்பத்தகாத விஷயமாக இருந்து வருகிறது. அதன் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்த ஏராளமான இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருத்து உள்ளது. சி.ஏ.ஏ-க்கு எதிரான ஸ்டாலினின் நிலைப்பாடு தொடர்ந்து உறுதியாக உள்ளது. சி.ஏ.ஏ தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதே சி.ஏ.ஏ-க்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்து வருகிறது.
டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ முயற்சி செய்கிறது.
2019 டிசம்பரில் நாடாளுமன்றம் சி.ஏ.ஏ சட்டத்தை நிறைவேற்றிய உடனேயே, நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் வெடித்தன.
முஸ்லீம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் இந்த சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்படுவதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களையும் தமிழ்நாடு கண்டது. தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி, சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து 2 கோடி கையெழுத்துக்களை சேகரித்து, அவை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன.
“2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், சி.ஏ.ஏ-வை திரும்பப் பெறக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறினார்.
ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தபோதும், அ.தி.மு.க-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்ததால் திராவிட அரசியலில் அதன் இடம் குறைந்ததை எதிர்கொண்ட நேரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பரில் பா.ஜ.கவுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது இ.பி.எஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். பா.ஜ.க-வை தி.மு.க எதிர்ப்பது வெறும் உதட்டளவு மட்டுமே என்று கூறினார். சிறுபான்மை சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் சி.ஏ.ஏ-வை அ.தி.மு.க ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
“தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் சி.ஏ.ஏ பாதிப்பை ஏற்படுத்தினால், எங்கள் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்காது என்பதை நாங்கள் எங்கள் ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், சிறுபான்மையினரை ஏமாற்றி மதவாத எதிர்ப்பையே தங்களின் அரசியல் மூலதனமாகக் கொண்டு தி.மு.க அரசியல் செய்கிறது. ஆட்சியில் இல்லாதபோது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பை காட்டுவது, ஆட்சியில் இருக்கும்போது ஒத்துழைத்து, சிறுபான்மையினருக்கு துரோகம் செய்கின்றனர். கோயம்புத்தூர் கலவரத்தையும், முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்டதையும் பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க-வுக்கு (அ.தி.மு.க-வை விமர்சிக்க) எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று எடபாடி பழனிசாமி கூறினார்.
தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யு.ஏ.பி.ஏ) போன்ற கொடூரமான சட்டங்களை தி.மு.க ஆதரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மறுபுறம், அவர்கள் (தி.மு.க) அவர்களை (பா.ஜ.க) சால்வைகள் மற்றும் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் நாடகமாடும் தி.மு.க-வினரின் நாடகத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். சிறுபான்மை சமூகத்தினருக்கு அ.தி.மு.க எப்போதும் கோட்டையாக நிற்கும் என்றும், அடக்குமுறை சட்டங்களை கடுமையாக எதிர்க்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியதில் இருந்து, அ.தி.மு.க., தமிழகத்தில் சுமார் 6% மக்கள்தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினரிடையே இழந்த இடத்தை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சி.ஏ.ஏ-க்கு எதிரான நிலைப்பாட்டை உடனடியாக எடுத்ததன் மூலம், சிறுபான்மை வாக்காளர்களைச் சென்றடைவதில் அ.தி.மு.க தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. கிறிஸ்தவர்களின் நலனைக் காக்க வேண்டும் என்றும், இருபதாண்டுகளாக பல்வேறு மாநில சிறைகளில் வாடும் முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதே போல, கிறிஸ்தவ சமூகத்தினரும் தமிழகத்தில் 6% மக்கள்தொகையைக் கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததில் இருந்து முஸ்லிம்கள் மத்தியில் அ.தி.மு.க தனது ஆதரவுத் தளத்தை இழந்து கொண்டிருந்தாலும், முஸ்லிம் சமூகத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு மாறி வரும் நிலையில், பா.ஜ.க இந்த விவகாரத்தை பற்ற வைக்க வாய்ப்பு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட்டால், அரசியல் பிளவு மாநிலம் முழுவதும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.