சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் அரங்கேறிய கலவரம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நேற்று அரங்கேறிய வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனின் தோ்தல் சின்னமான பானையை பாமகவினர் சிலா் சாலையில் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. அதனை சிலா் தட்டிக்கேட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இது தொடர்பான மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாக உள்ளதால் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொன்பரப்பியில் 13 இடங்களில் முகாமிட்டு 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்பரப்பில் நேற்று நடைப்பெற்ற இந்த கலவரம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியது. பார்ப்பவர்களின் கண்களிலும் கண்ணீரை வர வைத்திருந்தது. இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு இட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதுக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது.
கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக
நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால் பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தப்பட்டதை போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்தப் போக்கை சம்பந்தப்பட்ட சுயநல சக்திகள் கைவிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இது போன்ற மனப்பான்மை கொண்டோரின் சதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் " என்று கூறியுள்ளார்.
கே. பாலகிருஷ்ணன் :
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, “பொன்பரப்பி கலவரம் முழுக்க முழுக்க பாமக- வின் தோல்வி பயத்தை காட்டுகிறது. தேர்தலில் கட்சியினரிடையே போட்டி இருப்பது உண்மையே. ஆனால் அதற்காக ஆத்திரத்தில் தலித் மக்கள் மற்றும் அவர்களின் வீடுகள் மீது வன்முறை நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.