மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவுக்கு சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மணிப்பூர், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மம்தா பானர்ஜியை பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். மம்தா பானர்ஜி கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது அவருடன் துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.
மேலும், மு.க. ஸ்டாலின் - மம்தா பானர்ஜி சந்திப்பின்போது, அமைச்சர் துரைமுருகன், தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எ.ஏ உள்பட பலர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு முன் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்கள். சிறப்பாக சொல்ல வேண்டுமானல், கடந்த முறை கலைஞர் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலக்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களைப் பெருமைப்படுத்தியது. கலைஞரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராக இருக்கக் கூடிய இல. கணேசன் இல்லத்திலே நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில், என்னுடைய இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து என்னை சந்தித்திருக்கிறார். அதே நேரத்தில் நீங்கள் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வர வேண்டும் என்னை அழைப்பு விடுத்திருக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
இது மரியாதை சந்திப்புதான். தேர்தல் சந்திப்பு இல்லை. தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகத்தான் சந்திக்க வந்தார்கள். வேறு எதுவும் இல்லை.” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மு.க. ஸ்டாலின் என்னுடைய சகோதரர் மாதிரி. மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தேன். மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவுக்காக வந்திருக்கிறேன். சகோதரர் சகோதரி இடையேனா மரியாதை நிமித்தமான சந்திப்பு இது” என்று கூறினார்.
மு.க. ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.