திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்பது தான் வாக்குறதி. ஓராண்டில் 60 முதல் 70 விழுக்காடு அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கோம். எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் அப்படி தான். அதற்கு திராவிட மாடல் என பெயர் சூட்டியிருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் இதன் உள்ளடக்கம் என்றார்.
மேலும், திமுக அரசு பொறுப்பேற்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் 5 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவித்தார்.
காலை சிற்றுண்டி
அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை தூர கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும்.
தகைசால் பள்ளிகள்
டெல்லியை போல தமிழ்நாட்டிலும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும். 25 மாநகராட்சிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் (school of excellence) உருவாக்கப்படும். இங்கு, மாணவர்களுக்கு கல்வியோடு கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியனவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நகர்ப்புற நல்வாழ்வு மையம்
21 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தொடங்கப்படும். இங்கு காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும். இந்த நிலையங்களில், தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் உள்பட 4 பேர் பணியில் இருப்பர்
உங்கள் தொகுதியில் முதல்வர்
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மேலும் விரிவுப்படுத்த தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரும். ஒவ்வொரு எம்எல்ஏ-வும் ம் தொகுதிக்கு தேவையான 10 முக்கியமான திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். இதன் பணிகளுக்காக ரூ1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என முதல்வர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil