திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இதையடுத்து அந்த அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையே ரூ.1000 வழங்குவதில் நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள், வதந்திகள் எழுந்தன. முதலில் குடும்ப தலைவராக இருந்தால் மட்டுமே பெண்களுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒரு வதந்தி பரவியது. இதையடுத்து ஏராளமான பெண்கள் குடும்ப தலைவரின் பெயரில் இருந்து தங்களது கணவர் பெயரை நீக்கிவிட்டு தங்கள் பெயரை சேர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நிறைய இல்லதரசிகள் தங்கள் பெயரை ரேஷன் அட்டையில் மாற்றுமாறு அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே ஆகும். இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. குடும்பத்தலைவிகளுக்கான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துவற்கான வழிமுறைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன என கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil