தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.07.2024) சென்னை, கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுக்க நான் சுற்றிக் கொண்டிருந்தாலும், கொளத்தூருக்கு வருகின்றபோது என்னையே அறியாமல் ஒரு உற்சாகம், ஒரு ஊக்கம், ஒரு எழுச்சி ஏற்படுகின்றது. அதுவும் கொளத்தூரில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை பார்க்க வருகின்றபோது அதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்படுகின்றது.
அதனால்தான், எவ்வளவு வேலைகள் இருந்தாலும், முடிந்த அளவுக்கு பத்து நாளுக்கு ஒரு முறையோ; வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு நான் வந்து விடுகிறேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புத்துணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுவரைக்கும் 1921 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கக்கூடிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. 6147 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டியிருக்கிறோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி வருகிறோம். அதில் ஒரு கல்லூரிதான் மயிலை கபாலீஸ்வரர் கல்லூரி என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைப்பணியோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலையத் துறை செய்கிறது. அறநிலையத் துறையாக மட்டுமல்லாமல் இது அறிவுத் துறையாகவும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், 748 மாணவ மாணவியருக்கு கல்விக் கட்டணமும், கல்விக்குத் தேவையான கருவிகளையும் வழங்கியிருக்கிறோம்.
உங்களுக்கு மட்டுமில்லை, கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் நாள் இந்தக் கல்லூரியை திறந்து வைத்ததிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,405 மாணவ மாணவிகளுக்கும் இதேபோல கல்விக் கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கியிருக்கிறோம்” என்றார்.
மேலும், “மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் நான் தொடங்கி வைக்கப் போகிறேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“