தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகமே வியந்து நிற்கும் தஞ்சை பெரியகோவிலைக் கட்டியவர் ராஜராஜசோழன். பிற்காலச் சோழ வரலாற்றில் ராஜராஜசோழனின் ஆட்சிக் காலம் சிறப்பான ஆட்சிக் காலமாக வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகிறது. ராஜராஜசோழன் தமிழ்நாட்டில் பல கோயில்களைக் கட்டியுள்ளான். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளான சதயத் திருநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"