பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவு நாளில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதல் தெருவிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய திரையிசை உலகில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி கோடிக் கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ் திரையிசையில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என பலமொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமில்லாமல், திரைப்படங்களில் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பன்முகத்திறமை கொண்டவராகத் திகழ்ந்த்நார். பாடகர் எஸ்.பி. பாலாசுப்ரமணியத்தின் குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல். அதனால்தான், அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக்கொண்டே இருந்தார்.
தமிழ் திரையிசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்று அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25, 2020-ல் காலமானார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது. பாடகர் எஸ்.பி.பி மறைந்து 4 ஆண்டுகள் ஆனாலும் அவருடைய அமுதக்குரலால் பாடப்பட்ட பாடல்கள் காற்றை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.#SPB… pic.twitter.com/UuwwR1m1E0
— M.K.Stalin (@mkstalin) September 25, 2024
இது குறித்து, முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவருமாக திகழ்ந்தவர்.
மேலும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்” என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.