Advertisment

'கவிதை வடிவில் கலைஞர் வரலாறு': வைரமுத்து-க்கு ஸ்டாலின் கட்டளை

“கலைஞர் கருணாநிதியின் வரலாற்றை கவிப்பேரரசு வைரமுத்து, தமிழில் கவிதையாக எழுத வேண்டும். ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை. இன்னும் சொல்லப்போனால் எனது கட்டளை” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

author-image
WebDesk
New Update
vairamuthu book release

கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய  ‘மகா கவிதை’ நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கலைஞர் கருணாநிதியின் வரலாற்றை கவிப்பேரரசு வைரமுத்து, அவரின் தமிழில் கவிதையாக எழுத வேண்டும். ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை. இன்னும் சொல்லப்போனால் எனது கட்டளை” எனக் கோரிக்கை வைத்தார்.

Advertisment

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் திங்கள்கிழமை (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

vairamuthu book release

கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கலைஞர் கருணாநிதியின் வரலாற்றை கவிப்பேரரசு வைரமுத்து அவரின் தமிழில் கவிதையாக எழுத வேண்டும். ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை. இன்னும் சொல்லப்போனால் எனது கட்டளை” எனக் கோரிக்கை வைத்தார்.

Advertisment
Advertisement

இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “உரையை தொடங்குவதற்கு முன்பு கவிப்பேரரசுக்கு நான் சொல்ல விரும்புவது, நான் கவிஞனுமல்ல! கவிதை விமர்சகனும் அல்ல! கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய தலைவர் கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால்... ‘மகா கவிதை’ தீட்டிய கவிப்பேரரசு வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டி இருப்பார்.

பொதுவாக ஒரு கவிஞர், இன்னொரு கவிஞரைப் பாராட்ட மாட்டார். அப்படியே பாராட்டினாலும், கொஞ்சம் குறை சொல்லித்தான் பாராட்டுவார்கள். ஆனால், தலைவர் கலைஞரைப் பொறுத்தவரை, அழகிய தமிழாக இருந்தால், தன்னை அசத்திய தமிழாக இருக்குமானால், உள்ளிருந்து பாராட்டுவார், மிச்சம் வைக்காமல் பாராட்டுவார்! அப்படி கலைஞரின் பாராட்டு மழையில் நனைந்தவர்தான் நமது கவிப்பேரரசு, இந்த ‘கவிப்பேரரசு’ என்ற பட்டமே தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி வழங்கியதுதான்!

முதன்முதலாக, 1989-ம் ஆண்டு ‘எல்லா நதியிலும் என் ஓடம்’ என்ற புத்தகத்தை தலைவர் கலைஞர் கருணாநிதியை வைத்து வெளியிட்டார் வைரமுத்து.

‘எல்லா நதியிலும் என் ஓடம்’ என்று அவர் சொல்லிக் கொண்டாலும், அது எப்போதும் வந்து சேரும் கடலாகக் கலைஞராகத்தான் இருந்தார்! இதுதான் வைரமுத்துவுக்கு இருக்கும் சிறப்பும் பெருமையும்! வைரமுத்து எழுதிய 15 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞர் கருணாநிதியின் கைகள். இது இருவருக்கும் இருந்த நட்புக்குப் பெருமை!

பாசமிகு கவிப்பேரரசு... இந்த நேரத்தில் உங்களிடம் ஓர் அன்பான ஒரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன். மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ‘கவிராஜன் கதை’ என்ற தலைப்பில் எழுதியதைப் போல, தலைவர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்! உங்கள் தமிழில் கலைஞருக்கு ஒரு கவிதை வரலாறு வந்தாக வேண்டும் என்ற உங்கள் ரசிகனின் வேண்டுகோள், இன்னும் கூட கொஞ்சம் உரிமையோடு சொன்னால் கட்டளை!

தலைவர் கலைஞர் நிறைவாழ்வை எய்திய பிறகு நமது கவிப்பேரரசுவின் ‘தமிழாற்றுப்படை’ நூலை வெளியிட்டேன்; இப்போது ‘மகா கவிதை’யை வெளியிடும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்; அவற்றை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய "மகா ஆசை"!

சில மாதங்களுக்கு முன்பு, என்னை வந்து சந்தித்த கவிப்பேரரசு, இப்படி ஒரு நூலை எழுதி வருவதாகவும், அதனை நான் வந்து வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுவாக, அவரது படைப்புகள் வார இதழ்களில் வெளியாகும்.

வாரா வாரம் படிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு ஏற்படும். ஆனால், இந்த ‘மகா கவிதை’ என்பது மிக மிக ரகசியமாக இருந்தது. வார இதழ்களில் எழுதப்பட்டது அல்ல இது. எதிலும் வெளியிடப்படாமல் நேரடியாக புத்தகமாக வெளியாகி உள்ளது. எனவே, கவிப்பேரரசு வைரமுத்து எதைப் பற்றி எழுதி இருக்கிறார் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனது ஆர்வத்தை தணிக்கும் வகையில் வைரமுத்துவும் அவரது இரண்டு கவிதை வாரிசுகளும் சேர்ந்து வந்து, ‘மகா கவிதை’ நூலை என்னிடம் வழங்கினார்கள். அந்த புத்தகத்தை வாங்கிய போது, அதுவே மகா புத்தகமாகத்தான் இருந்தது. இன்னும் சொன்னால், ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருப்பது போல இல்லாமல், ஒரு வாளைக் கையில் ஏந்தியது போல நீளமாக இருந்தது. படைப்பு தரமாக இருப்பதைப் போல, சிலர் புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பது இல்லை. படைப்பும் தரமாக இருந்து, புத்தகத்தையும் அதைவிடத் தரமாகத் தயாரிப்பதில் கவிப்பேரரசு கண்ணும் கருத்துமாக இருப்பார். அந்த வகையில், படைப்புலகத்துக்கு மட்டுமல்ல, பதிப்புலகத்துக்கும் இந்த நூல் மகுடமாக அமைந்துள்ளது.

நிலம் - நீர் - தீ - காற்று - வானம் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பு என்பதை நீங்கள் அனைவரும் வாசிக்கும் போது உணர்வீர்கள். "நிலம் - நீர் - தீ - வளி - விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்" என்று சொல்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியம் தொடங்கிய இடத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

பொதுவாக, இந்த ஐம்பூதங்களையும் யாராலும் அடக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால், அந்த ஐம்பூதங்களையும் ஒரு கவிஞனால், தமிழ்க் கவிதைக்குள் அடக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் புத்தகம்தான் இந்த மகா கவிதை நூல்! மழையைப் பற்றி கவிஞர் சொல்கிறார்... "திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை" - என்கிறார்! அதனைத்தான் நாம் சில வாரங்களுக்கு முன்னால் பார்த்தோம். இதனை விட மழையை விளக்க முடியாது. அடுத்து நீரைப் பற்றிச் சொல்கிறார்... "ஆதியும் நீரே அந்தமும் நீரே தாய்க்குடம் உடைந்து பிறக்கிறோம் தண்ணீர்க் குடம் உடைத்து முடிக்கிறோம்" என்கிறார்.

"சூரியன்தான் எங்கள் ஒற்றை உயிர் விளக்கு" என்கிறார். "காற்றாகிய நான் ஒருநாள் நஞ்சூட்டப்பட்டால் மொத்த உலகமும் மூச்சழியும்" என்கிறார். கனிமம் - தாவரம் - நீர் - நுண்ணுயிர் - விலங்கு - காற்று - வானம் - தீ. அனைத்தும் நிகழ்கால மனிதா! உனக்கல்ல. நீ கால்நடையாய் வந்த ஒரு பயணி. நுகர்ந்தாயா - போய்விடு - என்று வழிகாட்டுகிறார் கவிஞர். இப்படி ஐம்பூதங்களும் கவிஞரின் தமிழில் அடங்கிக் கிடக்கின்றன இந்த நூலில். அறிவியலை - அதுவும் நவீன அறிவியலைச் சொல்லும் திறம் கொண்டது தமிழ்மொழி என்பதை நிரூபிப்பதாகவும் இந்த புத்தகம் அமைந்துள்ளது. வைரமுத்துவின் மொழி ஆளுமை - மொழி ஆற்றல் - இதில் வெளிப்படுகிறது.

மிகமுக்கியமான காலக் கட்டத்தில் இந்த நூலை எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு. இதற்காக அவரை முதலில் பாராட்ட வேண்டும். புயலும் - மழையும் - வெள்ளமும் தலைநகர் சென்னை முதல் தென் மாவட்ட குமரி வரைக்கும் சுற்றிச் சுழன்றடித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ஐம்பூதங்களைப் பற்றி கவிஞர் எழுதி இருக்கிறார். சென்னையாக இருந்தாலும் - நெல்லையாக இருந்தாலும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை பெய்யும் என்று சொன்னார்களே தவிர, எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை.

ஏரி உடைந்ததைப் போல - வானம் உடைந்து கொட்டியதாக மழை பெய்துள்ளது. 100 ஆண்டில் பெரிய மழை. 177 ஆண்டில் பெரிய மழை - என்று சொல்கிறோமே தவிர, இதற்கான காரணம் என்ன என்பதை யாரும் சொல்லவில்லை. உண்மையான காரணத்தை இந்தப் புத்தகத்தில் வைரமுத்து சொல்லிவிட்டார்... "மனிதன் இப்போது பூதங்களைத் தின்னத் தொடங்கிவிட்டான். அதனால்தான் பூதங்கள் மனிதனைத் தின்னத் தொடங்கி விட்டன" - என்று சொல்கிறார் கவிஞர். "மண்ணியல், விண்ணியல் மாற்றங்களை மனிதகுலம் பொருட்படுத்தாது போயின் ஐம்பூதங்களும் மனிதனுக்கு எதிராகத் திரும்பிவிடும்" - என்கிறார். அதுதான் உண்மை.

மண்ணும் - நீரும் - காற்றும் - வானமும் மாசுபட்டு விட்டதால், அந்த இயற்கை தன் குணத்தை இழந்து வேறுபடத் தொடங்கி விட்டதன் அடையாளத்தைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மழை பெய்வது இல்லை. பெய்தால் அதிகமாக பெய்கிறது. காற்று மாசுபட்டு விட்டது. உஷ்ணக்காற்று அதிகமாக வீசுகிறது. புவி அதிகப்படியாக வெப்பம் அடைந்து வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து விட்டது. - இவை அனைத்தும் ஐம்பூதங்களைக் காக்கத் தவறியதன் விளைவுதான்.

இனியாவது விழிப்படையாவிட்டால் பேரழிவு அதிகமாகும் என்ற எச்சரிக்கை மணியைத்தான் மகா கவிதை மூலமாக வைரமுத்து அடித்துள்ளார். எனவே, இது கவிதைப் புத்தகம் அல்ல, காலப் புத்தகம் என்றே சொல்லலாம். கவியரசு கண்ணதாசன், "கவிஞன் நானோர் காலக் கணிதம்" என்று சொல்வார். அதைப்போல, காலக் கணிதமாக கவிப்பேரரசு மாறி நிற்கும் புத்தகம்தான் மகா கவிதை!

vairamuthu book release

தமிழ்க் கவிதையில் காதலைப் பற்றி - இயற்கையைப் பற்றி - அரசியல் பற்றி - அழகியல் பற்றி - அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. அறிவியல் கவிதைகள் குறைவு. அதிலும் அறத்தை வலியுறுத்தும் அறிவியல் கவிதைகள் மிகமிகக் குறைவு. அந்தக் குறையைப் போக்கி இருக்கிறார் கவிப்பேரரசு. இந்த புத்தகம் தமிழ் நிலத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, உலகத்தையே பேசுகிறது. உலகத்துக்கே தேவையானதைப் பேசுகிறது.

ஒரு தமிழ்க்கவி, உலகக் கவியாக மாறும் உயரம்தான் இந்த நூல். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று உங்கள் அனைவர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன். நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாக காலநிலை மாற்றம்தான் இருக்கப் போகிறது என்பதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன.

கழக அரசு அமைந்ததும் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடக்கமாகத்தான், துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை" என்று அறிவித்தோம். தமிழ்நாட்டிற்கான காலநிலை திட்டத்தை அறிவித்தோம். நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சுமார் 2 கோடியே 8 லட்சம் மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.

காலநிலை மாற்றம் குறித்து பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" தமிழ்நாட்டில் செயல்படுத்தப்போகிறோம்.

இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக "Tamil Nadu Green Climate Company" உருவாக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் துவக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, "காலநிலை மாற்ற நிர்வாக குழு" எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை.

சமீபத்தில் ஏற்பட்ட புயல் - மழை - வெள்ளம் ஆகியவை சூழலியல் பிரச்சினைகள் மீது அதிகமான கவனத்தை ஈர்க்கின்றன. அதைப் போலவே கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதையும் ஐம்பூதங்கள் மீதான அக்கறையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இந்நூலை - கருத்து வாளை, அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதைகளைப் படிப்பதோடு, அதன்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்து! உங்கள் தமிழ்க் கவிதையை தமிழ்நாடு பேசும்! இயற்கை மானுடம் பேசும்! இந்த ‘மகா கவிதை’யை உலகம் பேசும்!” என்று மு.க ஸ்டாலின் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vairamuthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment