முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவுகு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 16-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் 45வது சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். சென்னை புத்தக் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் எழுதியுள்ள ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீடு குறித்து தெரிவித்தார். அப்போது அவர் தனது நூல் பற்றி கூறியதாவது: “நான் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல்பாகம் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. எனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் பதிவு செய்துள்ளேன். இளமைக் காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிக் காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரையிலான பதிவுகளுடன் முதல் பாகமாக அதை எழுதியுள்ளேன். விரைவில் புத்தகக் காட்சிக்கும் அந்த நூல் விற்பனைக்கு வரும்” என்று கூறினார்.
இதற்கு முன்பு, 2012ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் சோலை எழுதிய ஸ்டாலின், மூத்த பத்திரிகையாளர் பார்வையில் என்ற நூல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”