கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை புதன்கிழமை கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் மக்களையும் பட்டியலில் சேர்த்து, அந்த பட்டியலின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.
ஆதி திராவிடர்களாக் இருந்து மதம் மாறிய பின்னரும், தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே, இதனை நாம் கனிவோடு கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி, இந்து, சீக்கியர், பௌத்த மதத்தைத் தவிர்த்து, பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின் வகுப்பில் சேர்ந்தவராகக் கருத முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர்கள் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்பினருக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக, சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த உரிமைகள் தர வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு.
மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால், சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டதல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு, நான் வேறு என்பதாக இல்லாமல். நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கை கோடாக இல்லாமல் செங்குத்து கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைத்த தத்துவம்தான் சமூகநீதி தத்துவம். இந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த வகையில், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் அரசியல் சட்டம் சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011, ஆகிய கால கட்டங்களில் இதே கோரிக்கையை நிறைவேற்ற, பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து, வலியுறுத்தி இருக்கிறார். இதே பேரவையில் இந்த கோரிக்கை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று 06.01.2011-ல் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க சார்பில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெள்யிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் இன மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் தரும் வகையில், அரசாணைகள் வெளியிடப்பட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இடஒதுக்கீடு நீங்களாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களும் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுபவர்களுக்கான ஊக்கத் தொகை, உயர் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை என அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இட ஒதுக்கீட்டை வழங்குவது சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அரசியலமைப்பு பட்டியல் இன சாதிகள் திருத்த ஆணை 1950-ன் படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும், அட்டவணை சாதிகளில் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956-ம் ஆண்டு, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990-ம் ஆண்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராக சேர்க்க திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.
ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, அவர்கள் தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்பு, அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால், அது செல்லாது என்றும் மத்ம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என்றும் தேசிய பட்டியல் இன ஆணையத் துணை தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.
அப்போது, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில், ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் பெற்ற பிறகு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
இந்திய அரசிலமைப்பு சட்டத்தில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள, சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள், மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக ரீதியில் பயன்களைப் பெற அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். சமூக ரீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமன கேட்டு அமைகிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் வரவேற்றுப் பேசினார்கள். இதையடுத்து, இந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.