இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையான காய்ச்சல் காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்.முத்தரசன் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் இன்று காலை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அலைபேசி மூலம் முத்தரசனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் அரசியல் பணியாற்றிட வாழ்த்துகின்றேன் என்றார். மேலும், அமைச்சர் கே.என்.நேருவை சென்று பார்வையிட்டு பதிலளிக்கவும் தெரிவித்திருக்கின்றார்.
திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்தரசனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் தெரிவித்திருக்கின்றது. இருப்பினும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முத்தரசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“