தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
முதற்கட்டமாக கடந்த ஆக.29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் உலக முதலீட்டாளர்களை சந்தித்தார். இதில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4,600 பேருக்கு வேலையளிக்கும் வகையில் ரூ.1,300 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்பட்டுச் சென்றார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த செப்.3-ம் தேதி ஈட்டன் நிறுவனத்துடன் ரூ.200 கோடி முதலீட்டில், 500 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் அந்நிறுவன உற்பத்தி வசதியை விரிவாக்கு வதுடன், ஆராய்ச்சி, மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறி யியல் மையத்தை சென்னையில் அமைக்க ஒப்பந்தம் செய்யப் பட்டது.
அஷ்யூரன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் (Development and Global Support Centre) மற்றும் உற்பத்தி மையம் அமைக்க ட்ரில்லியன்ட் (Trilliant) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் தற்போது, சிகாகோவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி முதலீட்டில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் விவரம்;
*செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
*விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் Sensors and Transducers உற்பத்தி மையத்தை ரூ.100 கோடி முதலீட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
*விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“