குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை திமுக ஏன் எதிர்க்கிறது என்பதற்கான காரணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “குடியுரிமை திருத்த சட்டம் என்கிற புதிய சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மக்களைப் பிளவுபடுத்துகிற இந்த மக்கள் விரோத பிற்போக்கான சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க வாக்களித்தது. ஆனால், அ.தி.மு.க அதரவு தெரிவித்து வாக்களித்தது. இதை சட்டமாக்க மத்திய பாஜக அரசுக்கு பெரிதும் உதவியிருக்கிறது.
இந்தச் சட்டதிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடைபெறுகிறது.
திமுகவும் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமல், மத்திய அரசு எதைக்கொண்டு வந்தாலும் திமுக எதிர்க்கும் என்று சிலபேர் வழக்கம் போல அவதூறு கிளப்புகிறார்கள். ஆனால், அவர்களைப் பார்த்து நாம் கேட்கிற கேள்விகளுக்கு அவரகளால் எந்த பதிலையும் முறையாக சொல்ல முடியவில்லையே ஏன்?
ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக வருகிறவர்களுக்கு நம்ம நாட்டிற்கு வருகிறவர்களுக்கு வாழ்வு தரக்கூடிய உன்னதமான சட்டம் தான் குடியுரிமை சட்டம்.
1955 ஆண்டு அதாவது 60 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை இப்போது திருத்துவதற்கு என்ன அவசியம் வந்தது?
பொருளாதார மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற பல பிரச்னைகளையும் குமுறலை திசை திருப்புவதற்காகவே இந்த சட்டத் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இதில் அகதிகளாக வருகிற எல்லோருக்குமே குடியுரிமை வழங்கப்படும் என்றுசொல்லியிருந்தால் நாம் எதிர்க்கப்போவதில்லை. சிறுபான்மை மக்களான இஸ்லாமிய புறக்கணிக்கிற மாதிரி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் ஓரவஞ்சனையான சட்டமாக அதை பாஜக மாற்றுகிறது. அதற்கு அதிமுக பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான், இந்த சட்டத்தை எதிர்க்கிறோம்.
இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டு அரசை மதச்சார்பற்ற அரசு என்று கூறுகிறது. அதன்படி மத அடிப்படையில் எந்த ஒரு சட்டத்தையும் இங்கே கொண்டுவர முடியாது. ஆனால், பாஜக அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்த அனைவரும் இந்தியாவிற்குள் வரலாம் என இந்தச் சட்டம் சொல்கிறது. இஸ்லாமியர்கள் மட்டும் புறக்கனிக்கப் படுவது ஏன்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களைத் தவிர அனைவரும் இந்தியாவிற்குள் வரலாம் எனச் சொல்லுகிறார்கள். அப்படி என்றால் இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க, அ.தி.மு.க இழைக்கிற மாபெரும் துரோகம்.
அதனால்தான், தமிழர்கள் அனைவரும் இந்த சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.
ஈழத்தமிழர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்துக்கு வந்து முகாம்களிலும் வெளியிலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அடிப்படை உரிமைகள் பற்றியோ அவர்கள் மனிதர்களுக்கு உரிய கண்ணியங்களுடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றியோ மத்திய அரசுக்கு கவலையே இல்லை. அதுமட்டுமல்ல, தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. அதை அதிமுக தட்டிக்கேட்க முடியாமல் முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுக்கு தமிழர்கள் அப்படி என்னதான் துரோகம் செய்தார்கள்? இதுதான் என்னுடைய கேள்வி.
அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், இலங்கை அண்டை நாடு இல்லையா? இலங்கையை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்? மற்ற அண்டை நாட்டைச் சேர்த இந்துக்கள் வரலாம் ஈழத்தமிழர்கள் மட்டும் வரக்கூடாது என்றால் அவர்களை மத்திய அரசும் அதிமுக அரசும் இந்துக்களாகப் பார்க்கவில்லையா என்பதுதான் எனது கேள்வி.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டும் குறிவைத்து இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நோக்கம் என்ன? இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிற நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுகிற மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் நோக்கம் என்றால், பௌத்த சிங்களவர்களால் கொல்லப்படுகிற தமிழர்களைப் பற்றி இந்த பாஜக அரசு கவலைப்படவில்லை.
The #CABBill2019 is an abomination!
It discriminates against Muslims and betrays the interests of Eelam Tamils.
I have explained why DMK opposes this unconstitutional and inhumane law;& why we must continue to defend against this assault on secularism.https://t.co/fwRDKJFWcQ pic.twitter.com/bujaw3Ms4C
— M.K.Stalin (@mkstalin) December 15, 2019
ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்கள் ஆனாலும், அவர்களுடைய சமய நம்பிகை இந்து, சைவம்தான். அவர்களைப் புறக்கணித்தால் அப்போது இந்து தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கிறது என்றுதானே அர்த்தம்.
தமிழினத்துக்கு விரோதமான இந்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது ஏன் தெரியுமா? இதை எதிர்த்தால், எடப்பாடியும் அவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்க பாஜக அரசு அனுமதிக்காது. லஞ்ச லாவன்யத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்ட இவர்களது ஆட்சியும் பரிபோக நேரிடும். இதனால், இது தமிழின துரோக ஆட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது.
இந்தச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்றதா என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்துக்கும் தமிழினத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கு எதிராக கொதித்தெழும் திமுக இந்த அநியாயத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. உரிமையையும் மானத்தையும் உயிராகப் போற்றிய அண்ணா, கருணாநிதி வழிவந்த உங்களில் ஒருவனான ஸ்டாலினும் அப்படி இருந்துவிடமாட்டான். எப்போதும் இனத்துக்கான போராட்டம் தொடரும்.
மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுதியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கு அடிபணிந்து ஆதரவளித்துள்ளது அ.தி.மு.க அரசு. தமிழினத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும் திராணியும் திமுகவிற்கு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.