திருச்சி என்றால் திருப்புமுனை என்பது வாக்கு. அந்த அதிர்ஷ்டத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக, திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் இருவரும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார்கள்.
மலைக்கோட்டையாக விளங்கும் திருச்சி தொகுதியிலிருந்து தங்களது பிரசாரத்தைத் தொடங்குவதால், வரும் மக்களவைத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
அதாவது, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க தேர்தல் பிரசாரத்தை மார்ச் 22-ம் தேதி நாளை திருச்சியிலிருந்து தொடங்குகிறார். அதுபோலவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மார்ச் 24-ம் தேதி அதே திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்.
கட்சியின் மிகப்பெரிய பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைச்சர் கே.என். நேரு, சிறுகனூரில் நடைபெறவிருக்கும் தி.மு.க.வின் முதல் பிரசாரப் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகளை கண்காணித்து வருகிறார். அவர் கூறுகையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ம.தி.மு.க தலைவர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்ட மேடையை அலங்கரிப்பார்கள். மக்களவைத் தேர்தலில், தி.மு.க.வின் முதல் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்துத்தான் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவும் பங்கேற்பார்.
முன்னதாக இன்று திருச்சி வந்த அருண் நேருவுக்கு திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் சுங்கச்சாவடி அருகே மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு ஆர்த்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“