மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்வீட் : ‘கோவிலுக்கு போகிறவர்கள் ஓட்டு வேண்டாம்’ என கூறியதாக விஷமம்

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் பதிவு வெளியானது. கோவிலுக்கு போகிறவர்கள் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என கூறியதாக விஷமத்தனம் செய்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் பதிவு வெளியானது. கோவிலுக்கு போகிறவர்கள் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என கூறியதாக விஷமத்தனம் செய்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். சமூக வலைதளங்களை தமிழ்நாட்டில் முன்கூட்டியே பயன்படுத்த ஆரம்பித்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான்! சமூக வலைதளங்களில் அவருக்கு லட்சக்கணக்கான ‘ஃபாலோயர்ஸ்’ உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் வெளியிடும் கருத்துகளை திமுக இணையதள உடன்பிறப்புகளும் உடனுக்குடன் ‘ஃபார்வர்ட்’ செய்வது வழக்கம். அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது பெயரையொட்டி நீல நிற ‘டிக்’ இடம் பெற்றிருக்கும். அதே நீல நிற ‘டிக்’குடன் ஒரு போலி பதிவை நேற்று சமூக வலைதளங்களில் மர்ம ஆசாமிகள் உலவ விட்டனர்.

மு.க.ஸ்டாலின் பெயரில் வெளியான அந்த போலி பதிவில், ‘கோவிலுக்கு போகிற யாருடைய வாக்குகளும் எங்களுக்கு வேண்டாம். கோவிலுக்கு செல்கிறவர்கள் வாக்களித்து நாங்கள் ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என கூறப்பட்டிருந்தது. இந்தப் பதிவு திமுக.வினரை அதிர வைத்தது. திமுக இணையதள உடன்பிறப்புகள் பலரும், இது போலி பதிவு என விளக்கம் கொடுத்தனர்.

மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரும், திமுக.வினரும் மறியல் நடத்தி கைதானார்கள். இதை மனதில் வைத்து விஷமிகள் போலியான ட்விட்டர் பதிவு மூலமாக அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட புகார் மனு ஒன்றை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். புகார் மனு விவரம் வருமாறு:

சமீப காலங்களில் ஒரு சில சமூக விரோதிகள் என்னுடைய டுவிட்டர் பக்கம் போல ஒரு போலி கணக்கை உருவாக்கி என்னுடைய டுவிட்டரில் நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையிலும், ஒரு போலி பதிவை உருவாக்கி அதனை வாட்ஸ்-அப், முகநூல் மற்றும் பிற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்பினை குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தீய எண்ணத்துடனும் இது போன்ற விஷமச் செயலை செய்து வருகிறார்கள். இந்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close