Advertisment

அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்!

சி.பி.ஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிபிஐ மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிபிஐ மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்,

Advertisment

சிபிஐ மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு:

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ”40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்ற குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்கும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

லஞ்சம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் பெற்றதாக “குட்கா டைரியில்” இடம்பெற்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் திரு விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் திரு டி.கே ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின் அடிப்படையில் நடைபெறும் சி.பி.ஐ விசாரணையில், அமைச்சர் வீட்டிலும், டிஜிபி வீட்டிலும் ரெய்டு நடத்திய பிறகும் இருவரும் பதவியில் தொடருவது நியாயத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது.

“குட்கா வழக்கில் வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் காணவில்லை” என்று உயர்நீதிமன்றத்திலேயே அடாவடியாக சத்திய பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்யநாதன்.. குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள விவரத்தையே மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு தெரியாமல் மறைத்து திரு டி.கே. ராஜேந்திரனுக்கு ஓய்வு பெற்ற பிறகும் இரு வருடம் அவருக்கு பணி நீட்டிப்பு வாங்கிக் கொடுத்துள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குட்கா விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியர். அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதோ, அவர் எப்படி நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர்களுக்கு கட்டணம் கொடுத்து வழக்கை நடத்தினார் என்பது குறித்தோ துறை ரீதியான எந்த விசாரணையும் இல்லை.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை எடுத்துக் கொண்ட சி.பி.ஐ அமைப்பும் அமைச்சர் திரு விஜயபாஸ்கர், டி.ஜி.பி திரு டி.கே. ராஜேந்திரன் ஆகியோரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்த வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென்று மாற்றப்பட்ட போது அவர்களை மீண்டும் அதே பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் சி.பி.ஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த வழக்கில் சி.பி.ஐ அமைப்பின் விசாரணை ஒட்டுமொத்த “குட்கா” டைரி விவகாரத்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் அரைகுறையாக முடித்து விட்டு, அமைச்சர், டி.ஜி.பி. போன்றோரை தப்பவிடும் நோக்கில் அமைந்துள்ளதோ என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர், “குட்கா அமைச்சரை” ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கறும்பறவைகள்.

சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் திரு விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment