Advertisment

தேசபக்தி லேபிள்… அரசியல் மூடத்தனத்தை அடக்குவோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ptr palanivel thiagarajan, mk stalin, bjp, attacks on ptr palanivel thiagarajan, dmk, bjp, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது தாக்குதல், திமுக, முக ஸ்டாலின், பாஜக, காலணி வீசி தாக்குதல்

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நேற்று (ஆகஸ்ட் 13) நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதால், அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது அங்கே கூடி இருந்த பா.ஜ.க-வினர் அவரது காரின் மீது காலணி வீசியும், கார் கண்ணாடிகளை தட்டியும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட செயலுக்கு பலரும் பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் கார் மீது காலணி வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தி.மு.க உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் உத்தரவாத மடல்.
இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு - இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சிக் கருத்தியலை முன்னெடுக்கின்ற நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்திய இராணுவத்தில் பணியாற்றி, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் அவர்களின் மறைவுக்கு, முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய இரங்கலைத் தெரிவித்ததுடன், இராணுவ வீரரின் உடலுக்குச் செலுத்தப்பட வேண்டிய அரசின் மரபார்ந்த மரியாதையைச் செலுத்திடுமாறு தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்களை பணித்திருந்தேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அந்த வீரமகனை இழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட இராணுவ வீரர் இலட்சுமணனின் உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினார்.

அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அதுகுறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள். வீரமரணம் எய்திய இராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று, குடும்பத்தினரைச் சந்தித்து, வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும். விடுதலையின் 75-ஆவது ஆண்டினை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களோ, ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் இராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் இலாபம் தேடலாம் என்ற கணக்குடன், சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்று, தேசியக் கொடியை அவமதித்துள்ளனர்.

இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், “இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்” எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பி.டி.ராஜன் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் புதல்வருமான மாண்புமிகு அமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்கள் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத் தெரிவித்து, மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தியிருப்பதுடன், தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய ‘சிந்த்ரெல்லா’ வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சர் அவர்களின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, கழகச் செயல்வீரர்களும் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உணர்வெழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், “மதவெறி அரசியலின் மலிவான விளம்பரத்திற்குப் பதிலடி என்ற வகையில் நாமும் அதற்கு இடம் அளித்துவிடக்கூடாது” என்ற தி.மு.கழக பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் விடுத்த அறிக்கையை ஏற்று, அமைதி காத்து வருகிறார்கள்.

மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கழகமும் செயல்பட்டு வருகிறது. இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன்.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.” என்று மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Mk Stalin Dmk Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment