ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்

'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'

'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தர்மபுரி பஸ் எரிப்பு 3 பேர் விடுதலை: மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறையை பிரதமர் அலுவலகம் புகுத்துவது, சமூக நீதிக்கு கேடானது என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

Advertisment

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு குளறுபடி குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை : ‘மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப் பாதையில் அநியாயமாகச்செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதி முறை களை உருவாக்கத்துடித்துக்கொண்டிருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத் தேர்வை நடத்தியும் தேர்வுசெய்து முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச் சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.

இப்போது சிவில் சர்வீஸஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள்பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச்செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித் திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Advertisment
Advertisements

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுன்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச்செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது. “நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம்”, என்று போடப்பட்டு வந்த நான்காண்டு கால பகல் வேஷம் இதன்மூலம் கலைந்துள்ளது.

பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றே அர்த்தம். எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தை திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு “பவுன்டேஷன் கோர்ஸ்” என்ற போர்வையில், ஒரு வகை யிலான "நீட் தேர்வை” அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச்சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தவறினால் சமூகநீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிடிருக்கிறார்.

 

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: