பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது, மிகவும் வருந்தத்தக்கது என்றும் வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுவிட்டது என்றும் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறினார்கள். இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது.” என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது, மிகவும் வருந்தத்தக்கது என்றும் வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுவிட்டது என்றும் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருப்பதாவது: “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது, மிகவும் வருந்தத்தக்கது. தனது தோல்விகளுக்கு எதிராக எழுந்துள்ள பொதுமக்களின் கோபத்திற்கு அஞ்சி, மோடி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, உடனடி தோல்வியாகத் தோன்றுவதைத் தவிர்ப்பதற்காக வெறுப்பூட்டும் பேச்சை நாடியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்.
பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சு காதில் கேட்காதது போல, இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுவிட்டது.
இந்தியா கூட்டணி உறுதியளித்த சமூக - பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நீண்ட கால தாமதமான ஒரு தீர்வாகும். பிரதமர் அதை திரித்து, சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரிய பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
பா.ஜ.க-வின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்திய அணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நமது உறுதிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“