Advertisment

டெல்லியில் விவசாயிகள் போராட்டப் பாதையில் முள்- ஆணி படுக்கை விரிக்கும் கொடூரம்: ஸ்டாலின் கண்டனம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டப் பாதையில், தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் முள்-ஆணிப் படுக்கைகளை விரித்து ஒன்றிய பா.ஜ.க அரசு கொடூரமான சூழலை உருவாக்கியிருப்பதாக மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin

மு.க. ஸ்டாலின் Picture Source: Facebook/ MKStalin

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லியில் விவசாயிகள் போராட்டப் பாதையில், திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் முள்-ஆணிப் படுக்கைகளை விரித்து ஒன்றிய பா.ஜ.க அரசு கொடுமையான சூழலை உருவாக்கியிருப்பதாக மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

“2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023-இல் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவி, இந்தியா கூட்டணிக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!” என கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

நாடாளும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ள நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலமாகத் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவைக் காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்ற காரணத்தால், தேர்தல் பணிகளை விரைந்து தொடங்கிய இயக்கமாக நமது கழகம் முன்னணியில் இருக்கிறது.

தி.மு.க என்பது ஒரு மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் தி.மு.க.வை விமர்சித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு தி.மு.க.வின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பா.ஜ.க.வைச் கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம். அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான்.

அரசியல் கருத்துகளை - கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ - நேர்மையோ இல்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, தன் வசப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என நினைத்து வன்மத்துடன் செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்துவதுடன், சட்டமன்றத்திலும் தனது கைப்பாவையாக உள்ள ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என நினைத்து, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரத்தன்மையுடன் செயல்பட்டு, தங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம், தமிழ்நாடுதான். அதுவும், தி.மு.க.வின் குரலாகத்தான் இருக்கும். 1975-இல் அந்தக் குரல் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. நெருக்கடிகளை எதிர்கொண்டு, ஆட்சியையே விலையாகக் கொடுத்து, ஜனநாயகத்தைக் காத்தது தி.மு.கழகம். இப்போதும் ஜனநாயகம் காப்பதற்கான முதன்மைக் குரலாகவும், இந்தியா முழுவதும் அது எதிரொலிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் குரலாகவும் தோழமை சக்திகளுடன் இணைந்து ஓங்கி ஒலிக்கிறது தி.மு.க.வின் குரல்.

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நாடெங்கும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கான முதல்படியாக பிப்ரவரி 16, 17, 18 ஆகிய நாட்களில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு - புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது.

தலைநகர் சென்னையைச் சார்ந்த 3 நாடாளுமன்றத் தொகுதிகள் நீங்கலாக, மற்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள உரிமை முழக்கக் கூட்டம் உங்களில் ஒருவனான என் பெயரில் அமைந்திருந்தாலும், ஒலிக்கப் போவது உடன்பிறப்புகளாம் உங்களின் குரல்தான். முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு ஊட்டிய கொள்கை உணர்வின் முழக்கம்தான். பேரறிஞர் அண்ணா தலைமையில் 1957-இல் முதன்முதலில் களம் கண்ட தேர்தல் முதல், ஒவ்வொரு தேர்தல் களத்தையும் அதன் தன்மையறிந்து எதிர்கொள்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல்சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும். இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, இந்தியத் தலைநகர் டெல்லியிலும், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போர் மேகங்கள் சூழந்தது போன்ற பதற்றத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் ஆணிப் படுக்கைகள், எல்லாத் திசையிலும் பாதுகாப்புக் காவலர்கள், கடுமையான பரிசோதனை நடவடிக்கைகள்.

தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது. அசைந்து கொடுக்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது.

அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?

ஒன்றிய பா.ஜ.க அரசின் உழவர்கள் விரோத வேளாண் சட்டங்களைத் தி.மு.கவும் தோழமைக் கட்சிகளும் எதிர்த்தபோது, அந்தச் சட்டங்களை ஆதரித்தது அ.தி.மு.க. பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் ஒன்றிய பா.ஜக.. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு முழுமையாகத் துணை நின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது அ.தி.மு.க.

நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு, மாநிலங்களின் வரி வருவாயைப் பறிக்கும் ஜி.எஸ்.டி, மின்னுற்பத்தியையும் விநியோகத்தையும் சீரழிக்கும் உதய் மின்திட்டம் என ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - மாநிலக் குரோத திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் ஆதரவு தந்து, உரிமைகளை அடகு வைத்து, கஜானாவைக் கொள்ளையடித்து ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து கொண்டவர்கள்தான் அ.தி.மு.க.வின் பழனிசாமியும் அவரது அமைச்சரவைக் கூட்டாளிகளும்.

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகள் அனைத்திற்கும் துணை நின்று ஆதரித்த அ.தி.மு.க.தான் இப்போது பா.ஜ.க சொல்லிக் கொடுத்ததுபோலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜ.க செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அ.தி.மு.க. மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இருக்கிறது. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துபோனதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காற்று போன பலூன்களானதையும் எடுத்துரைக்கத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை மீட்கும் முழக்கம் ஒலிக்கவிருக்கிறது.

தேர்தல் களப்பணி என்றால் அதனைத் தி.மு.க.விடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசியல் எதிரிகளும் பாராட்டும் வகையில் செயல்படக்கூடியவர்களான நம் உடன்பிறப்புகள் அவரவர் நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களைச் சிறப்பான முறையில் நடத்தி, வெற்றிக்கு அடித்தளமிட வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

கழகத்தின் பொதுக்கூட்டம் என்றாலும், மாநாடுகள் என்றாலும், திண்ணைப் பிரச்சாரமாக இருந்தாலும் அது பல்கலைக்கழகப் பயிற்சி வகுப்புகளாக இருப்பதுதான் வழக்கம். நாடாளுமன்றத் தேர்தல் களத்தை எதிர்நோக்கித் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகளுக்கும் பி.எல்.ஏ-2 எனப்படும் பாகமுகவர்களை நியமித்து, பூத் கமிட்டிகளை அமைத்து, ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 10 பேர் என்ற அளவில் ஏறத்தாழ 6 இலட்சத்து 80 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களாம் முன்கள வீரர்களைக் கொண்டுள்ள இயக்கம் தி.மு.கழகம். அவர்களுக்கு களப்பயிற்சியும் இணையத்தளப் பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் வியூகத்தைக் கற்றுத்தரும் வகையில் கழக முன்னணியினரின் சிறப்புரையுடன் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட – மாநகர – பகுதி – ஒன்றிய – நகர - பேரூர்க் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், பி.எல்.ஏ-2, பி.எல்.சி. ஒருங்கிணைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும். கழகத்தின் மகளிரணி, மகளிர் தொண்டரணி மற்றும் பூத் கமிட்டிகளில் உள்ள பெண் நிர்வாகிகள் பங்கேற்கக் கூடிய வகையில் போதுமான இட வசதிகளும், உரிய பாதுகாப்பும் அமைத்துத் தரப்படவேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதிப் பார்வையாளர்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டியினர் கலந்துகொள்வதை உறுதிசெய்து, கண்காணித்திட வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர்களும் பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து, சரியான முறையில் திட்டமிட்டு, கழக உடன்பிறப்புகளுடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.

மேடை அமைப்பு, விளம்பரங்கள், ஒலி-ஒளி அமைப்பு, இருக்கை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் ஆகியவை குறித்து தலைமைக் கழகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதை மனதிற்கொண்டு, கட்டுக்கோப்பான முறையில் கூட்டத்தை நடத்தி, மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, அவர்களின் பேராதரவுடன் வெற்றியை அறுவடை செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.

இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அடுக்கடுக்கான சாதனைகளையும், பத்தாண்டுகால பா.ஜ.க ஆட்சியின் தொடர்ச்சியான துரோகங்களையும் -மோசடிகளையும் துண்டறிக்கைகளாக அச்சிட்டு வீடு வீடாகச் சென்று மக்களிடம் வழங்கி, பொதுக்கூட்டத்திற்கு அழைக்கும் பணியைப் பல தொகுதிகளிலும் மேற்கொண்டிருப்பதை அறிகிறேன். அதுபோல வாய்ப்புள்ள வகையில் எல்லாம் உரிய முறையில் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. மற்றவர்களும் இத்தகைய பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து கழகத்தினருக்குப் பயிற்சி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு பா.ஜ.க. - அ.தி.மு.க. மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித் துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ அமைந்திட வேண்டும். அதுதான், பாசிசத்தை வீழ்த்தி, ‘இந்தியா’ வென்றிடுவதற்கான களத்தை அமைத்துத் தரும்.

2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023-இல் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவி, இந்தியா கூட்டணிக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும். நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும், வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது.

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment