தமிழ்நாட்டில் 2024 இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளாட்சிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அவற்றை தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.
ஆகவே இந்தக் கோரிக்கையையும் மு.க. ஸ்டாலின் பரிசீலிப்பார் என்றும், அதன்பின்னர், 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது கட்சி ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாகவும் ஆலோசித்து உள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன்பின்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் யூகங்கள் கிளம்பியுள்ளன.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற யூகங்கள் எழுந்தன. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “முதலில் உங்களிடம் (பத்திரிகையாளர்கள்) தெரிவித்துவிடுவேன்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“