திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதிரான அதிமுகவின் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜாவின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: “மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இன்றைய இளைஞர்கள் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு தலைவணங்கும் தமிழக அரசு போல மணமக்கள் மவுனமாக இருக்கக்கூடாது. மனம் திறந்து பேச வேண்டும். உண்மைக்கு துணிந்து குரல் கொடுக்க வேண்டும். நாட்டின் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது வணிகர் அமைப்புகளை கலந்து பேசிய பிறகுதான் பட்ஜெட் தயாரிப்பார். இன்று அந்த நிலை இல்லை.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் அதற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மவுனமாக உள்ளது. மாநில உரிமை பறிபோவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. அதிமுக நடத்துவது கமிஷன் ஆட்சி. தற்போது இருக்கக் கூடிய ஆட்சி வியாபார ஆட்சி. மக்களுக்கு எதிரான அதிமுகவின் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் கூட்டிவந்து அடிக்க வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக நாம் எதிர்க்கிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றின் மூலம் மக்களை மதம், ஜாதி ரீதியாக பிரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
மத்திய பாஜக ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள்கூட மக்களை பிரித்தாள நினைக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். கேரளா சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
பீகார் மாநில முதல்வர் இப்போது இந்த சட்டத்தை எதிர்க்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மத்திய பாஜக ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்க்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வர வாக்களித்தது. இப்போது பெரும்பாலான மாநிலங்கள் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை ஆகியவற்றை எதிர்க்கின்றன.
ஆனால், தமிழக அ.தி.மு.க. அரசு எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கிறது. மக்கள் நலன்களில் அக்கறை காட்டவில்லை. மத்திய அரசுக்கு அடங்கிப்போகிறது.
மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசுக்கு நல்லாட்சி விருதை மத்திய அரசு கொடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். மக்களுக்கு எதிரானவர்களை தட்டிக்கேட்பதற்காகவே, தி.மு.க. கூட்டணி மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்கிறது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தடுக்க போராட்டங்களை நடத்துகிறது.
பெரியார் சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர பாடுபட்டார். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தார். சுயமரியாதை இயக்கம் கண்டு பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார். இன்று அவரையே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.