பிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்? மு.க.ஸ்டாலின் கேள்வி
MK Stalin Criticises TN Governor Banwarilal Purohit: எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன்?
By: WebDesk
Updated: October 10, 2018, 08:37:12 AM
Tamil Nadu News Live Updates
பிரதமர் நரேந்திர மோடி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மாறினாரா? என மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது என்று அக்டோபர் 6-ம் தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மூன்று நாட்கள் கழித்து திடீரென்று, “ஊழல் நடந்ததாக நான் எதுவும் கூறவில்லை” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆளுநர் அவர்கள் இதுகுறித்துப் பேசியது வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்த போதெல்லாம் அமைதி காத்த ஆளுநர், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன்?
ஊழல் அ.தி.மு.க அரசையும், இந்த துணை வேந்தர் நியமனங்களைச் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற உள்நோக்கம் அந்த மறுப்பறிக்கையில் எதிரொலிக்கிறது.
ஊழல் அ.தி.மு.க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கி விட்டு இன்னொரு பக்கம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் ஆளுநரும், அ.தி.மு.க அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்கள். “அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதிமொழி எடுத்துள்ள ஆளுநர் அதன் கீழ் வழங்கப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை விமான நிலையத்தில் இடைமறித்து கைது செய்ய வைத்ததை நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்து பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள “எடுபிடி” அரசு நீடித்தால் பா.ஜ.க.வின் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அந்த அரசால் ஆட்டுவிக்கப்படும் ஆளுநரும் நினைத்தால் தமிழ்நாட்டு மண் அதற்கு ஒருபோதும் இடம் தராது என்பதுடன் – ஜனநாயக ரீதியாக மக்களின் கடும் கோபத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
முதலமைச்சர் பிரதமரை சந்தித்து விட்டார் என்பதற்காக அ.தி.மு.க அரசின் ஊழல்களை மூடி மறைக்கும் நோக்கத்தில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டு விடாமல் தடுத்து தன் பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.