குட்கா ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாகவும், குட்கா விற்பனைக்கு துணை நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறையினரின் ஆதரவின்றி போதைப் பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்தச் சூழ்நிலையில், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், குட்கா ஊழல் வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். குட்கா ஊழல் வழக்கு சுதந்திரமாக நடைபெற சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். குட்கா வழக்கில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது.
டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கும் இதில் லஞ்சம் தரப்பட்டுள்ளது. குட்கா ஊழலில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குட்கா விற்பனை குறித்து ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் பேச முற்பட்டபோது அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து எங்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர்.
குட்கா விற்பனைக்கு துணை நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். சந்தேகம் வந்தவுடனேயே பதவி விலகுவதுதான் சரியானது. முதலமைச்சர் முதற்கொண்டு அனைவருக்கும் மாமுல் சென்றுள்ளது. எனவே முதலமைச்சர் பதவி விலகுவதுதான் அவருக்கு அழகு" என்று தெரிவித்துள்ளார்.