சுகாதாரத்துறை செயலிழப்பு; அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே டிஸ்மிஸ் செய்க - மு.க.ஸ்டாலின் அறிக்கை

திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது (complete breakdown of administration) என்பதற்கு இதுவே சாட்சி

கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்து போனதற்கு சாட்சி. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் ஹெச்.ஐ.வி. இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சபதம் எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்தில் டிசம்பர் 3-ம் தேதியே ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு – அதுவும் விருதுநகரில் உள்ள சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. உள்ள ரத்தத்தைச் செலுத்தி, அரசே அந்த இளம்பெண்ணை ஹெச்.ஐ.வி. நோய்க்கு உள்ளாக்கியிருப்பது அதிமுக அரசு நிர்வாகத்தின் படு தோல்வியைக் காட்டுகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்றவுடன் ஏதோ நடவடிக்கைகள் எடுப்பதாக விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்வர் அதற்குப் பிறகு அப்படியே மவுனம் சாதிப்பதும், விலை மதிப்பு மிக்க உயிருடன் விபரீத விளையாட்டை நடத்திய சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளையோ, அல்லது அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவறு நடந்து விட்டது என்று மட்டும் ஒப்புக்கொண்டு ஒரு அரசு செயல்படுவதும் தமிழகத்திற்கு அழிக்க முடியாத கருப்பு சரித்திரத்தையும் கழுவாய் தேடமுடியாத கண்டனத்தையும் உருவாக்கியிருக்கிறது.

ரத்த தானம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்து அவரும் தற்போது உயிரிழந்திருப்பது தமிழக அரசின் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படும் ரத்தங்களின் பாதுகாப்பின் மீது மிகப்பெரிய கேள்வியையும் ஆழமான சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது. சாத்தூரில் நடைபெற்ற கொடூரமான, மனித நேயமற்ற சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற இதேபோன்ற, சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. அதை விட புகார் கொடுத்த பெண்ணின் வீட்டிற்கு கவுன்சிலிங் செய்யப் போகிறோம் என்ற தோரணையில் நள்ளிரவில் சென்று மிரட்டியது அநாகரிக நடவடிக்கையின் உச்சமாகவும், அரசு மனித உயிர்களுடன் விளையாடுவதில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி செயல்படுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

சாலை விபத்துகள், ரத்த புற்று நோய், தீவிர ரத்த சோகை, பெரிய அறுவை சிகிச்சைகள் என்று அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த ரத்தத்தைப் பெறுவதற்கு நடத்தப்படும் ரத்த தான முகாம்களோ, தாங்களாகவே ரத்தம் கொடுக்க முன் வரும் தன்னார்வமிக்கவர்களோ கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்களா என்பதிலேயே சந்தேகம் எழுந்துள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்த தான நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்போம்” என்றார். ஆனால் அவரும், அவருடைய ஆட்சியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் பொறுப்பற்ற நிர்வாகத்தால் விலை மதிப்பற்ற உயிர்களுக்கு ஆபத்தை உண்டாக்குவதில் மும்முரமாக செயல்பட்டது இப்போது சாத்தூரிலும், சென்னை மாங்காட்டிலும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. 99 சதவீத விழுக்காடு ரத்தம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வருகிறது. அந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் சேவையை மதித்து, அந்த ரத்தங்களை எல்லாம் உரிய முறையில் சேமித்து வைத்து அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை எளிய நடுத்தர மக்களை காப்பாற்றிட அதிமுக அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு மருத்துவமனையிலேயே ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தாலும், அதிமுக அரசுக்கு இதெல்லாம் சகஜம் என்ற மனப்பான்மையில் இன்னமும் கூட மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றப்பட்ட அனைவரையும் இந்நேரம் சோதித்து இருக்க வேண்டும். அப்படி எந்த சோதனையும் நடத்தியதாகத் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் அரசு மருத்துவமனைகளை நாடவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டு விடும். ஆகவே முதலில் அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படுத்த ரத்த வங்கிகள் முறையாக பராமரிக்கப்பட்டு, கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய சோதனைகள் கடைப்பிடிக்கப்பட்டு, தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் பெறப்படும் ரத்தங்களையும் முறையாக சோதித்து அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் சேர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான முறையிலேயே ரத்தம் சேகரிக்கப்படுகிறது என்பது தொடர்பாக மிகப்பெரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு மருத்துமனையிலேயே ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது என்பது அதிமுக அரசுக்கு அவமானம். கர்ப்பிணிப் பெண்ணுக்கும், சென்னையில் உள்ள பெண்ணுக்கும் நடந்த கொடுமை ஒரு புறம், அந்த ரத்தத்தை தானம் செய்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டது இன்னொரு புறம் என்று சுகாதாரத்துறை செயலிழந்து விட்டது. அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது (complete breakdown of administration) என்பதற்கு இதுவே சாட்சி.

இப்படியொரு மோசமான நிர்வாகத்திற்கு வித்திட்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும், ஆறு வருடத்திற்கும் மேலாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்தும் படு மோசமான நிர்வாகத் தோல்விக்கு காரணமாக இருக்கும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உடனடியாக மாற்றப்பட்டு, திறமையான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை சுகாதாரத்துறைக்கு நியமிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம்: ரத்த தானம் வழங்கிய இளைஞர் மரணம்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close