'எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' - மு.க.ஸ்டாலின்

"பொது வாழ்வில்" தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது

"பொது வாழ்வில்" தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' - மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியின் “நட்சத்திர” ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ள நாகராஜன் - செய்யாதுரையின் அனைத்து நிறுவன அலுவலகங்கள், வீடுகள், உறவினர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் அந்த வருமான வரிச்சோதனை பற்றி நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Advertisment

“கான்டிராக்டர், உறவினர் வீடுகளில் 120 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. கார்களில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைத்தது அம்பலம்” என்று "தினத்தந்தி "நாளிதழ் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது. “இரு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாயையும் சேர்த்து 150 கோடி ரூபாயும், 100 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்” எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது” என்றும் வருமான வரித்துறையில் உள்ள “சோர்ஸ்” அடிப்படையில் “இந்து ஆங்கில இதழ்” முதல் பக்கத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறது.

“நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. 110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்” என்றும், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தமிழக அளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளிகளை எடுத்து, சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்” என்றும் “தினமணி” நாளிதழின் முதல் பக்கச் செய்தி கூறுகிறது. “120 கோடி ரூபாய் பறிமுதல்” என்று செய்தி வெளியிட்டிருக்கும் “தினமலர்” நாளிதழ், “எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோன்ஸ் என்பவரது வீட்டில் இருந்து 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தீபக் என்பவரின் காரில் 28 கோடி ரூபாயும், ஜோன்ஸ் என்பவரின் காரில் 25 கோடி ரூபாயும், ரவிச்சந்திரன் காரிலிருந்து 24 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. எஸ்.பி.கே நிறுவனத்துக்கும் மாநில அரசின் அதிகார மையத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த சோதனை மேலும் தீவிரமடையும்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

Advertisment
Advertisements

“நெடுஞ்சாலைத்துறையில் 7,940 கோடி ரூபாய் டெண்டர் எடுத்த கான்டிராக்டர் வீடு, ஆபிசில் ஐ.டி. ரெய்டு. 180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல். இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு தொடர்பு” என்று “தினகரன்” நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி - உள்பட இன்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ள வருமான வரித்துறை ரெய்டு பற்றிய தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கின்றன. அதிமுகவின் “டெண்டர் ராஜ்யம்” எப்படி ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் வெட்கம் - நாணமின்றி உலா வருகிறது என்பதை எல்லோர்க்கும் உரைத்திடும் விதத்தில் அமைந்திருக்கிறது.

முதலமைச்சரின் “பினாமி”யாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதலமைச்சரின் சம்பந்தியுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வருமான வரித்துறை சோதனை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

இவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதலமைச்சர் வாய்மூடி மௌனியாக அமைதி காக்கிறார்; நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் எவ்வித பதிலும் சொல்லாமல் பாராமுகமாக விரதம் இருக்கிறார். வருமான வரித்துறை சோதனை மேலும் தீவிரமடையும் இந்த நேரத்தில் கூட, மாநில மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று வாயே திறக்காமல், முதலமைச்சர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும் போது “ஊழல் ராஜ்யம்” பற்றி மக்களுக்குப் பதில் சொல்ல முதலமைச்சரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஒரு முதலமைச்சரே உறவினர்களை வைத்து டெண்டர் எடுப்பது “பொது வாழ்வில்” தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது. அதுவும் தனது துறையிலேயே ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை எடுக்க வைத்து “கமிஷன்” பார்ப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுக ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள மிக மோசமான கருப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது.

தனது சம்பந்தி பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்ததன் மூலம் “அரசியல் சட்டப்படி செயல்படுவேனே தவிர யாருக்கும் சாதகமாகச் செயல்பட மாட்டேன்” என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழியை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டார். ஊழலுக்கு விளக்கம் அளிக்கவும் முன்வராமல், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவும் முன் வராமல் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி “மவுனியாக” இருப்பது தமிழ்நாட்டிற்கு இழிவையும் பெருத்த தலைகுனிவையும் தந்திருக்கிறது.

ஆகவே, மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சுதந்திரமான விசாரணைக்கு நியாயமான வழி விட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

நாகராஜன்- செய்யாதுரை மற்றும் முதலமைச்சரின் சம்பந்தி உள்ளிட்டோரின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த டெண்டர்களில் கைமாறிய "கமிஷன்" குறித்து விரிவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: