முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை 22 இடங்களில் மிக பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட உள்ளோம். இந்த விழாக்களின் வாயிலாக, எங்களது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று விளக்கிச் சொல்லக்கூடிய வகையில், அந்த பிரசாரமும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது," என்று தெரிவித்தார்.
மிகவும் முக்கியமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்ததுதான். சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறோம். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை," என்று தெரிவித்தார்.