dmk leader mk stalin : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
”நான் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், என்னைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் எடுத்துச் சொன்ன ஊடகத்தினருக்கு நன்றி”என்ற கனத்த குரலுடன் தனது உரையை தொடங்கினார்.
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நானும், கழகத்தின் பொருளாளராக அண்ணன் துரைமுருகன் அவர்களும் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
இந்த ஓராண்டில், ஊடகத்துறையைச் சார்ந்த நீங்கள், எங்களைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் தெளிவோடு எடுத்துச் சொல்லி, எங்களை ஊக்கப்படுத்தியிருப்பதற்காக முதலில் உங்களுக்கெல்லாம் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று (29.8.19) திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில், இதுவரையில் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றியிருக்கும் பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்திருக்கிறோம்.
மேலும், 'மக்கள் பணியில் உங்கள் கடமையை தொடர்ந்து ஆற்றிட வேண்டும். வாக்களித்திருக்கும் மக்களுக்கு நன்றி சொல்லும் பணியையும் விரைவாக முடித்திட வேண்டும். தொடர்ந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, அவர்கள் கோரிக்கைகளை, மனுக்களை, ஒரு அலுவலகத்தில் அமர்ந்து அவற்றையெல்லாம் நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து எடுத்துச் சொல்லி, அதை நிவர்த்தி செய்யும் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவேண்டும்' என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஏதாவது சிறப்புச் செய்தி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,”திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுபேற்று ஓராண்டு முடிவுற்றது குறித்து பல ஊடகங்கள் - பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றனர். சிலர் விமர்சித்தும் எழுதி இருக்கி
இருக்கின்றார்கள். சிலர் அறிவுப்பூர்வமான கருத்துகளையும் யோசனைகளையும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே, அவற்றையெல்லாம் நான் உள்வாங்கிக்கொண்டு, நிச்சயமாக என்னுடைய கடமையை நான் ஆற்றுவேன்.” என கூறினார்.
வருங்காலத்தில் தலைவராக உங்களின் முக்கிய நோக்கம் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர், சோதனைகளை – சாதனைகளையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பதில்லை என்றும் தங்களை தலைவர் கலைஞர் அவர்கள் வழி நடத்திக் காட்டி இருக்கின்றாரோ, அந்த வழிநின்று நாங்கள் அவற்றையெல்லாம் துணிவோடு சந்திக்க காத்திருக்கிறோம் என விளக்கமளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.