/indian-express-tamil/media/media_files/2025/08/25/stalin-2-2025-08-25-20-22-05.jpg)
MK Stalin
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் தொடங்கியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் அவரை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
கரூர் மாநகரில் நடைபெறவுள்ள திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி, தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல. கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிடுவது திமுக அல்ல. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்ததும் லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ”பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளும் செப்டம்பர் மாதம் வந்ததால், அவற்றை முப்பெரும் விழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை நம் தலைவர் கலைஞர் கருணாநிதிதான் தொடங்கினார்.
கலைஞர், இந்த விழாவை மூன்று நாள் திருவிழாவாக முன்னெடுத்து, மூத்த முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, பாவேந்தர், மற்றும் கலைஞர் பெயர்களில் விருதுகளை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நானும், இளைஞரணிச் செயலாளராக, வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன் என்பதை நினைவில் கொள்கிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள்
1987-ல் நம் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டதும் முப்பெரும் விழாவின்போதுதான். 1990-ல், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, முப்பெரும் விழாவுடன் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகியவற்றையும் இணைத்து ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடினோம். அப்போது, இளைஞரணியின் பேரணியை நான் வழிநடத்தியது என் மனதில் இன்றும் நிழலாடுகிறது.
கரூரில் முப்பெரும் விழா: 2026-ன் முன்னோட்டம்
நம் தலைவர் கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றது முதல், சென்னைக்கு வெளியே ஒவ்வொரு மாவட்டத்திலும் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு, செப்டம்பர் 17 அன்று கரூர் கோடாங்கிப்பட்டியில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெறவிருக்கிறது.
இந்த விழாவில், மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. பெரியார் விருது கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கும், அண்ணா விருது பாளையங்கோட்டை சுப.சீதாராமனுக்கும், கலைஞர் விருது சோ.மா.ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, நம்மை விட்டுப் பிரிந்த குளித்தலை சிவராமன் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும். மேலும், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கத்துக்கும், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் ந.பழனிசாமிக்கும் வழங்கப்பட உள்ளது.
திமுக: மக்களின் நலன் காக்கும் இயக்கம்
"கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் அல்ல திமுக. கொள்கையில்லாத கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிடுவது திமுக அல்ல. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்ததும் லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்."
தமிழ்நாடு கடந்த நான்காண்டுகளில் பல்வேறு இலக்குகளில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி, கல்வி, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறார்கள்.
இந்த முப்பெரும் விழா, 2026 தேர்தல் களத்தில் நாம் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்பாக அமையும். இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வீர்! பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்!” என்று ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.