திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெயரில்,பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியதாக சென்னை போலீசிடம் திமுக சார்பில் கட்சி அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.
திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக பரபரப்பாக பேசப்படும் நிகழ்வு குறித்து மர்ம நபர்கள், திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளை தெரிவித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, திமுக சார்பில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மக்களை மதரீதியாக துண்டாட நினைக்கும் சக்திகள் ஒன்றிணைந்து திமுக மீது வன்மம் வைத்து இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 17ம் தேதி ஸ்டாலின் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த போலி டுவிட்டர் அக்கவுண்டில் இருந்து
“கருப்பர்கூட்டத்தின்மேல்தேவைஇல்லாதவிமர்சனங்கள்எழுந்துள்ளது. தமிழர்களின்குலவழிபாடும், அய்யனாரும், சுடலைசாமிவழிபாடுதான். மாற்றாகபார்பனர்களின் முருகன்வழிபாடல்ல. ஆகையால் கருப்பர் கூட்டத்திற்குதேவையானசட்டஉதவிகளை திமுகசெய்யும்..” என்ற தகவல் பகிரப்பட்டிருந்தது.
இது திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தை அச்சு அசலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள போலி பக்கம் ஆகும். இந்த பதிவின் மூலம் மக்களிடையே மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்த சில சமூகவிரோதிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டு திமுக கட்சி மீது மக்களுக்கு வெறுப்பை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த குற்றச்செயல் புரிந்தவர்கள் மீது, தகவல்தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 66, பிரிவு 66 (ஏ), 66(பி), 66 (சி) மற்றும் 66(எப்) பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு கடவுள்களை வழிபடும் பல்வேறு மக்கள் வசித்து வரும் நிலையில், முருகப்பெருமானை இழிவுபடுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை திரித்துக்கூறி ஒற்றுமையாக வாழும் மக்களிடையே, பிரிவினையை ஏற்படுத்தி அவர்களிடையே மதம் சார்ந்த மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கருப்பர் கூட்ட அமைப்பு மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 1860 பிரிவு 153 ஏ (1) (a) மற்றும் (b), 505 (2) பிரிவுகளின் கீழ் சட்டப்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கை உருவாக்கி தவறான தகவல் வெளியிட்ட நபர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டர் 420, 467, மற்றும் 471 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த புகார்களின் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இதன்மூலம் கேட்டுக்கொள்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.