Advertisment

சூதாட்டத்திற்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது: திருச்சியில் இ.பி.எஸ் பேட்டி

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த அரசு அதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆன்லைன் ரம்மியும் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

author-image
WebDesk
New Update
EPS

Mk Stalin government supports gambling- EPS

திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.

Advertisment

திருச்சி மாவட்ட எல்லையான வையம்பட்டியில்,500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்து விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். நாங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்றார்.

திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்ததோ அப்படித் தான் கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறும் நியாயமாக இருக்காது என்று சாடினார்.

புதுமைப் பெண் திட்டத்திற்கு ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., வரவேற்பு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன் அவர்களுக்கு திமுகவுடன் தொடர்பு உள்ளது. அதனை தற்போது வெளிப்படையாக காட்டிவிட்டார். திமுகவுடன் உள்ள நெருக்கத்தை சரிப்படுத்தியுள்ளார்.

திமுக சார்பில் அளிக்கப்பட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. வாக்களித்த மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக உள்ளது. நூல் விலை ஏற்றத்தால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1000, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, காஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என எதையும் திமுக அரசு செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வாக்களித்த மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலேயே அதிக தார்ச்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம் என்பதை அ.தி.மு.க. ஆட்சியில் தான் உருவாக்கினோம்.

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த அரசு அதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆன்லைன் ரம்மியும் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக நாங்கள் சட்டமே நிறைவேற்றினோம். ஆனால் தற்போது சூதாட்டத்துக்கு துணைபோகும் ஆட்சியாக திமுக அரசு உள்ளதோடு மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கிறது ஸ்டாலின் அரசு. சூதாட்டத்துக்கு கருத்து கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான்.

இலவச திட்டங்களால் எந்த பயனும் இல்லை, இதனால் நாடு வளராது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது.

அதிமுகவிற்கு என ஒரு கொள்கை இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் திட்டங்கள் இருக்குமோ? அதை செயல்படுத்துவோம் என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிகமான நிதி கொடுத்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இபிஎஸ், அது அவர்களது சொந்த விருப்பம். என்னைப் பொறுத்தவரை நானும் ஆன்மிகம் தான். நீங்க சொல்லுங்க.. இந்தியா ஒரு ஜனநாயக நாடு அவரவர்களுக்கு அவரது மதம் புனிதமானது. அந்தந்த தெய்வம் புனிதமானது. என்னைப் பொறுத்தவரை எல்லா சாமியும் கும்பிடுவேன். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொருந்தும். இந்தியா ஜனநாயக நாடு என்றார்.

சாலைகள் பாலங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் தான். கொள்ளிடம் அணை நாங்கள் போட்ட திட்டம் தான் இதற்கும் "ரிப்பன் கட்” செய்து அவர்கள் திறந்து வைப்பார்கள் என்று கிண்டல் செய்தார்.

திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், பரமேஸ்வரி, மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment