Advertisment

பெரும் மகிழ்ச்சியில் ஸ்டாலின்: 'ஸ்வீப்' செய்த அமைச்சர்கள் யார், யார்?

தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி வாகை சூடுகிறது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தவழ்ந்ததை பார்க்க முடிந்தது.

author-image
WebDesk
New Update
urban local body polls results, tamilnadu, aiadmk, aiadmk leaders lose their party fort, edappadi palaniswami, திமுக, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், கோட்டையை பறிகொடுத்த அதிமுக தலைவர்கள், செந்தில் பாலாஜி, கேஎன் நேரு, முக ஸ்டாலின், கோவை, சேலம், senthil balaaji, kn nehru, mk stalin, eps, sp velumani, sengottaiyan, coimbatore, salem, erode, dmk, dmk sweep winning

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி வாகை சூடுகிறது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தவழ்ந்ததை பார்க்க முடிந்தது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், தலைவர்கள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி அனைவரும் திமுகவின் இந்த வெற்றி குறித்து மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 22) வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடக்கத்தில் இருந்தே திமுக முன்னிலை வகித்து வந்தது. மாலை 4 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்களில் முடிவுகள் வெளியாகி திமுக அனைத்து மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் கைப்பற்றியது என்ற செய்தி வெளியாகி வந்தது. இதையடுத்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது திமுக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, எம்.பி.க்கள் ஆ. ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திமுக 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதே போல, சேலத்தில், திமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்த மாவட்டங்களை திமுக வசமாக்க வேண்டும் என்று அப்போதே குறி வைக்கப்பட்டது.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சரைப் பொறுப்பாளராக நியமனம் செய்து அந்த மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியும் சேலம் மாவட்டத்துக்கு திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவையும் தருமபுரி மாவட்டத்துகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் பொறுப்பாளராக நியமித்தார்.

கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தயார் செய்து முடுக்கி விட்டார். அதே போல, அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து 25 பேர் பங்கேற்ற கோவை மாவட்ட பூத் கமிட்டி பாக முகவர்கள் கலந்துகொண்ட மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி திமுகவினருக்கு உற்சாகம் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 70 இடங்களை திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா 4 இடங்களிலும் மதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே போல, கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் திமுக 159 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 386 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாநகராட்சியில் திமுக 47 வார்டுகளில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது. சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் 96 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 278 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றி அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதே போல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் நகராட்சியில் உள்ள 33 இடங்களில் 20 இடங்களில் திமுக வெற்றி பெற்று போடிநாயக்கனூர் நகராட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியும் திமுகவினருக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கோவை, சேலம் மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றிவாகை சூடிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியாதவது: “இந்த தேர்தல் நேரத்திலே தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒரேயொரு வேண்டுகோளை வைத்திருந்தேன். அது, எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை கொடுங்கள். அதனை பயன்படுத்தி உங்களுக்காக பணியாற்ற தொண்டாற்ற காத்திருக்கிறோம் எனக் கோரினேன்.

தற்போது அந்த முழு வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், அந்த நம்பிக்கையை இந்த 9 மாத காலத்தில் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் நிறைவோற்றுவோம் என உறுதியளிக்கிறேன்

மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றும் பதிவாகும் அளவுக்கான சாதனையை செய்துக் கொண்டிருக்கிறோம். செய்யப்போகிறோம்.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு 100 சதவிகிதம் கிடைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி நிர்வாகத்திலும் 100 விழுக்காடு திமுக கூட்டணி இருக்கவேண்டும் என்றுதான் பிரச்சாரத்தின் போதும் எடுத்துரைத்தேன்.

இதற்காக ஸ்டாலின் பேராசை கொள்கிறார் என நினைத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் உங்களது வாக்குகள் மூலமாக உங்களுக்கான உரிமையை நிலைநிறுத்தியிருக்கிறீர்கள்.

இந்த வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் இங்கே நிற்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் பொறுப்புகளை உணர்ந்து நம்முடைய அரசின் சார்பில் நிறைவேற்றப்படும். இவ்வளவு சிறப்பான வெற்றிக்கு காரணமாக அமைந்திருப்பது திராவிட் முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.

இது தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. கொள்கை அடிப்படையில் வலிமையாக இருப்பதால்தான் இந்த வெற்றி கிட்டியிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த கூட்டணி பல வெற்றிகளை கண்டிருக்கிறோம். அதன்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் அயராது பரப்புரை மேற்கொண்டு இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு மூலம் சமூகத்தில் உள்ள சரிபாதி பெண்கள் உள்ளாட்சி பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இது மாபெரும் சமூக நீதி, திராவிட மாடல் புரட்சியாகும்.

பெண்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்குவதுதான் நம்முடைய கழகத்தின் லட்சியம், குறிக்கோள். ஆகையால் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

என்னுடைய பணிவான உரிமைகலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

மக்களுக்காக உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நான் தொடர்ந்து நிச்சயமாக உறுதியாக கண்காணித்துக் கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்பேன். தயங்க மாட்டேன்.

மாபெரும் வெற்றியை தந்திருக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

உண்மையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஒரு ஸ்வீப் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட, கோவை மாநகராட்சி மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்கு முக்கியமானது என்பதை திமுகவில் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். அதே போல, சேலம் மாநகராட்சியையும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் குறிபாக எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியது அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. இந்த வெற்றியும் திமுகவுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. திமுக மற்ற மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் கைப்பற்றி இருந்தாலும், திமுகவில் ஸ்வீப் செய்த அமைச்சர்கள் என்று குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது திமுகவில் பிரம்மாண்ட மாநாடுகளுக்கு பெயர் போன அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் என்றால் மிகையல்ல. இந்த வெற்றியால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Coimbatore Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment