முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி செல்லும்போது அவர் கையில் வைத்திக்கும் குச்சியைப் பார்த்த பொதுமக்கள் மத்தியில் அது என்ன குச்சி என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை பலரும் மருத்துவக் குச்சி என்று கூறினாலும், முன்னாள் தி.மு.க பொருளாளர் நாஞ்சில் மனோகரன் இதே போல, கையில் குச்சி வைத்திருந்ததால் மு.க. ஸ்டாலின், நாஞ்சில் மனோகன் பாணியைப் பின்பற்றுகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. நேரம் கிடைக்கும்போதெல்லாம், லாங் சைக்கிளிங் செய்வார். உடற்பயிற்சி கூடங்களில் கடுமையாக வொர்க் அவுட் செய்வார். தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார்.
கடந்த 2 மாதங்களாக மழை, புயல் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெளியில் நடைபயிற்சி செல்லாமல் வீட்டுக்குள்ளேயே டிரெட்மில் மீது நடைபயிற்சி மேற்கொண்டார். மழை, புயல் எல்லாம் ஓய்ந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கம் போல, வெளியில் நடைபயிற்சியை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள தியோசஃபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நடைபயிற்சியின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன், இந்து குழுமத்தின் அதிபர் என். ராம் உள்ளிட்டோரும் ஒன்றாக நடைபயிற்சி செல்வது வழக்கம்.
தியோசஃபிகல் சொசைட்டியில் நடைபெறும் விழா காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில், நடைபயிற்சி மேற்கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி செல்வதைப் பார்த்த அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து முதல்வர் ஸ்டாலினிடம் சென்று பேசினார்கள். ஸ்டாலினும் அவர்களுடன் அன்புடன் பேசினார். முதல்வரை எளிமையாகக் கண்டு வியந்த பொதுமக்கள், ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர். புகைப்படம் யார் எடுப்பது என்றபோது, அங்கே உடன் இருந்த இந்து குழுமத்தின் அதிபர் என். ராம் தானே முன்வந்து செல்போனில் புகைப்படம் எடுத்து கொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த எளிமை பொதுமக்களால் மிகவும் விரும்பப்படுகிற ஒன்றாக இருக்கிறது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் ஒரு குச்சி இருந்தது. அந்த குச்சியைப் பார்த்த பலரும், அது என்ன குச்சி என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிலர் அது ஒரு வகையான மருத்துவக் குச்சி என்று கூறுகிறார்கள். சிலர், இது போன்ற குச்சிகள் அக்குபிரஷர் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். சிலர் இது முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் வைத்திருந்த குச்சி போன்றதா என்றும் கேட்டு வருகின்றனர்.
இந்த அக்குபிரஷர் குச்சியை நடைபயிற்சியின்போது, கையில் வைத்துக்கொண்டிருந்தால், உற்சாகமளிப்பதாகக் கூறுகிறார்கள். இந்த குச்சி கருங்காலி மரத்தால் செய்யப்படுகிறது என்றும் இது மருத்துவ குணங்கள் கொண்டது என்றும் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதையும் முதல்வர் ஸ்டாலின் கடைபிடிப்பார் என்பது அனைவரும் அறிந்தது. அந்த வகையில்தான், ஸ்டாலின் இந்த குச்சியைக் கையில் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்திருக்கும் இந்த குச்சி பற்றி சிலர் அரசியல் ரீதியாகவும் கருத்து கூறுகிறார்கள். இதே போல, தி.மு.க-வில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முன்னாள் பொருளாலருமான நாஞ்சில் மனோகரன் கையில் குச்சி வைத்திருந்ததை நினைவு கூர்ந்து, ஸ்டாலின் நாஞ்சில் மனோகரன் பாணியைக் கடைபிடிக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சராகவும் திமுக பொருளாளராகவும் இருந்தவர் நாஞ்சில் மனோகரன். இவர் எப்போதும் கையில் ஒரு குச்சி வைத்திருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த காரணத்திற்காக அவரை அப்போது ஜெயலலிதா போன்றவர்கள் மந்திரக்கோல் மைனர் என விமர்சித்தார்கள். மு.க. ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் குச்சியும் கிட்டத்தட்ட அதே போன்ற தோற்றம் கொடுக்கிறது. ஆனாலும், என்ன காரணத்திற்காக ஸ்டாலின் இந்த குச்சியைக் கையில் வைத்திருக்கிறார் என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
எப்படியானாலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் குச்சி தமிழக அரசியலில் மட்டுமல்ல பொதுமக்களிடையேயும் பேசுபொருளாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலினே சொல்லாத வரை அது என்ன குச்சி என்று ஆளுக்கொரு ஊகம் வளரத்தான் செய்யும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.