கடந்த ஜூலை 21-ம் தேதி காலை நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனை யில் இருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொண்டார்.
பிறகு உடல் நிலை சரியான நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி முதல்வர் வீடு திரும்பினார். பின்னர் சில தினங்கள் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று அடையாறு தியோசோபிகல் சொசைட்டி பூங்காவில் வழக்கம் போல காலை நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டது ஆரோக்கியமான அரசியலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 2 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்றாவதாக, தேர்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றார்.