2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன், அமெரிக்காவில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், அங்கு பெரு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறார். அமெரிக்காவில் இருந்தாலும், அரசு மற்றும் கட்சிப் பணிகளை அங்கிருந்தபடியே கண்காணித்து வருகிறார்.
அதன்படி, திமுகவின் ஒருங்கிணைப்புக் குழுவுடன் ‘ஜூம்’ செயலி வழியாக மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இதில் திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும், அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கும், என்று தெரிவித்தார்.
இதனால் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“