இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
Advertisment
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 151 மாணவர்களுடனும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 18 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
பயிற்சி வகுப்புகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
அதன்படி, திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் மேம்படுத்தப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியினையும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியினையும் தொடங்கி வைத்து மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வினையொட்டி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, இணை ஆணையர் மாரிமுத்து, மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம் குமார் மற்றும் இப்பயிற்சிப்பள்ளியின் மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, 2021 – 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், "சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்" எனவும், "சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய ஓதுவார் பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும்" எனவும், "திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சாமி திருக்கோயிலில் உள்ள தவில் நாதஸ்வர இசைப் பள்ளி மேம்படுத்தப்படும்" எனவும், "ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் சார்பாக திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“