சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றிவிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி சுகாதாரத்துறையை தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கிய நாள்முதல் சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டுவந்த டாக்டர் பீலா ராஜேஷ் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வந்தார்.
தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய புள்ளி விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துவந்தார். பின்னர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்தார். ஓரிரு நாள் தலைமைச் செயலாளரும் இணைந்து கொரோனா புள்ளிவிவரங்களை ஊடகங்களிடம் தெரிவித்தார். மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரே அறிவித்தார். இடையில், முதல்வர் பழனிசாமி சில நாட்கள் கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்களை வெளியிட்டார்.
தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனை நியமித்தது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரிப்பது மட்டும் குறையவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று காலை சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷை வணிகவரித்துறை செயலாளராக மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை சுகாதாரத்துறை செயலாளராக தமிழக அரசு நியமனம் செய்தது. இது இயல்பான பணியிட மாற்றம்தான் இதற்கு வேறு காரணமோ இல்லை என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றிவிட்டு முதல்வர் பழனிசாமி சுகாதாரத் துறையையும் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும். இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.