விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் கூட்டரங்கில் ஆலோசனை நடத்தினார்.
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான செட்டியார் குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில், மற்ற 20 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க தவறிய, மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவிஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
இதைத் தொடர்து, கள்ளச் சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், விழுப்புரம் மதுவிலக்கு டி.எஸ்.பி பழனி, செங்கல்பட்டு டி.எஸ்.பி துரைபாண்டி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்களைத் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம், நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை CBCID-க்கு மாற்றப்படுகிறது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கி. சங்கர், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல் நாத், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் என். கண்ணன், விழுப்புரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர்பி. பகலவன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நா. ஸ்ரீநாதா, அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“