காவிரி உரிமை மீட்புப் பயணம் இரண்டு குழுக்களாக பயணிக்கும் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தி கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், "நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் வரலாறு காணாத அளவில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி உரிமை மீட்புப் பயணத்தை டெல்டா பகுதி முழுவதும் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பயணத்தை 2 குழுக்கள் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (ஏப்.7) திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து ஒரு குழு பயணத்தை தொடங்குகிறது. அதன்பின், வரும் 9ம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் இருந்து மற்றொரு குழு பயணத்தை தொடங்குகிறது. இந்த இரண்டு குழுக்களையும், கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தொடங்கி வைக்க உள்ளார். நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மேலும், எஸ்.சி, எஸ். டி. விவகாரத்துக்காக சென்னையில் வரும் 16 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.