தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ள காலை உணவுத் திட்டத்தை நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களு அவர்களுடைய தொகுதியில் தொடங்கி வைக்க மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், முதற்கட்டமாக ஆயிரத்து 545 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்தார். காலை உணவுத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம், தமிழ்நாடும் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
தமிமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 25- 8 2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27- 7- 2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காலை உணவுத் திட்டத்தை வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”