மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கு கட்சியினரின் ஏக ஆரவாரத்திற்கு இடையே வேட்புமனு தாக்கல் செய்தார். தாயாரிடம் ஆசி... தங்கையிடம் முத்தம் என உணர்ச்சி மயத்திற்கு பஞ்சமில்லை.
மு.க.ஸ்டாலின், வருகிற 28-ம் தேதி கூடவிருக்கும் திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதையொட்டி திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனுன் இன்று (ஆகஸ்ட் 26) வேட்புமனுத் தாக்கல் செயதனர்.
இதையொட்டி காலையில் கோபாலபுரத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். அப்போது துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார். தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தயாளுவிடம் காட்டி வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மு.க.ஸ்டாலின். முன்னதாக அவரும், துரைமுருகனும் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் வேட்புமனுக்களை வைத்து வணங்கினர்.
பின்னர் அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது, ‘தலைவர் தளபதி வாழ்க’ என கட்சிக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
வேட்புமனுத் தாக்கல் செய்த மு.க.ஸ்டாலினை கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் வாழ்த்தினர். திமுக மகளிரணி செயலாளரும், ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி முதலில் கை கொடுத்து ஸ்டாலினை வாழ்த்தினார். பிறகு கன்னத்தில் முத்தமிட்டு தனது சகோதரரை வாழ்த்தி உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து
மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரான மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் கனிமொழியின் முத்த வாழ்த்து, ஸ்டாலினை நெகிழ வைத்தது. கட்சிப் பிரமுகர்களும் இதை வரவேற்று ஆரவாரம் செய்தனர்.