மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். 39 பேர் கொண்ட இக்குழுவில், 4 பேர் அதிமுகவினர் ஆவர்.இந்த குழுவினர், 6 மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் ஆகியவை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்காணிக்கப்படும்.
இக்குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர் பாலு. எஸ்.எஸ் பழனி மாணிக்கம். ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி,ஆர் நடராஜன், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், ரவீந்திரநாத் , கே.நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி. நவநீத கிருஷ்ணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரும், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா மற்றும் செங்கோட்டையன் ஆகியோரும் உள்ளனர்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் துறை திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்துதல் அல்லது நடுநிலைப் படுத்த உரிய திருத்தங்களை செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய குழுவின் பணியில் அடங்கும்.
மேலும், திட்டங்களை செயல்படுத்துவதில் தரப்பட்ட புகார்கள் முறைகேடுகள் பயனாளிகளின் தவறான தேர்வு போன்ற புகார்களை பின் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தல் ஆகியவையும் இக்குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil