தமிழ்நாடு அரசின் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதால் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதைப்பற்றி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
"கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமுல் நிறுவனம் இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய உள் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்", என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது", என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளர், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil