ரஜினி, கமல் மீது ஸ்டாலின் மறைமுக தாக்கு! கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம்; மணக்காது

பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும்.

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பாசமிகு மடல்.

பொது வாழ்வில் – அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும்; எதுவும் நிரந்தரமில்லை என்கிற வாழ்வில், தொண்டர்களின் பாச உணர்வலைகள் மட்டும் ஓயாது கரையேறிச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாக உவகை மேலிடக் காண்கிறேன். ஆம்.. கழக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது; தொய்வின்றித் தொடர்கிறது; துவளும் நெஞ்சங்களுக்கும் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கிறது!

கழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – ஊராட்சி – வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி, பேரூர் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் தனி அமர்வாகவும்; அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களை மற்றொரு அமர்வாகவும்; மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி கழக நிர்வாகிகள் இன்னொரு அமர்வாகவும் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த பலதரப்பட்ட நிர்வாகிகளைச் சந்திப்பதுடன், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பொறுப்பாளர்களை யும், மூத்த முன்னோடிகளையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து மகிழ்கிறேன். சந்திப்பு என்பதைவிட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும்.

கழகத்தினரின் திருமுகங்களை மாநாடுகளில் கண்டிருக்கிறேன், பொதுக்கூட்டங்களிலும் தேர்தல் பரப்புரைகளிலும் பார்த்திருக்கிறேன். கழகத்தினர் நடத்தும் இயக்க நிகழ்வுகளிலும் – இல்ல நிகழ்வுகளிலும் பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கழக ஆய்வுக் கூட்டம் என்ற முறையில் ஒவ்வொருவரிடமும் நேரில் களிப்புடன் கலந்து உரையாடும் வாய்ப்பு என்பது கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, செயல்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கின்ற தொண்டர்களுக்குத் தொண்டனான – உங்களில் ஒருவனான எனக்கும் புதிய உத்வேகமூட்டும் அனுபவமாக அமைந்துள்ளது. இதனை கள ஆய்வு நிகழ்வுகளிலும் நான் குறிப்பிட்டுப் பேசியுள்ளேன்.

ஒவ்வொரு நாளும் 400க்கும் அதிகமான ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்கள் – மாவட்டங்கள் என சந்திக்க வேண்டியிருப்பதால், அத்தனை பேருக்கும் பேசுகின்ற வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை என்பதற்கான காரணத்தை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கழக அமைப்புகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்கின்ற வகையில், சிலரைத் தேர்வுசெய்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறோம். நிச்சயம் இது போதாது என்பதை நானும் அறிவேன். நேரம் போதாமையால் இந்தமுறை இதற்கு மேற்பட்ட எண்ணிக்கை யில் பேச அனுமதிக்க முடியவில்லையே என்ற நெருக்கடியான கவலை எனக்கும் இருக்கிறது. எனினும், உருவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல, ஒருவரின் உள்ளத்தை மற்றொருவர் பிரதிபலித்து கழகத்தின் நிலையை எடுத்துரைக்கும் நிலையைக் காண்கிறேன்.

கிண்ணம் முழுவதும் தேன் நிரம்பிய நிலையில், அதில் ஒரு துளி எடுத்துச் சுவைத்துப் பார்த்து, கலப்படமில்லாத மலைத்தேன்தானா என்பதை உறுதி செய்துகொண்டு, குழந்தையின் நலத்திற்குக் கொடுக்க வேண்டிய மருந்துடன் அந்தத் தேனைக் குழைத்துத் தருகின்ற தாயைப் போல, கழக வளர்ச்சி என்ற தேனும், அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைவதற்கான கசப்பு மருந்தும் உரிய அளவில் கலக்கப்பட்டதுபோல, கள ஆய்வில் பேசுவோர் தம் கருத்து களை மிகவும் எதார்த்தமாக முன்வைக்கிறார்கள். கருத்துரைப்போர் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்திருப்பது கழகத்தின் நலன் ஒன்றுதான். அதை வெளிப்படுத்தும் முறையிலேயே பேசியவர்கள் எடுத்துரைத்தனர். தனி நபர்களை விட, கழகம் எனும் தத்துவப் பாசறைதான் நம் அனைவர்க்கும் உயிர் நாடி!

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்பு களின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்!

அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.

×Close
×Close