ஆளுநரின் அரசியல் வீழ்த்தும் தேவையை உணர்த்தக்கூடியதாக சேலம் இளைஞரணி மாநாடு இருக்கும் என்று திமுக தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்” ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புகுச் சிறிதும் தகுதியில்லாமல் தரம்தாழ்ந்து அரசியல் செய்வதை இந்தியா இப்போதுதான் காண்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்களை ஆயுத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது சேலம் இளைஞரணி மாநில மாநாடு.
திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லோர் மீதும் காவிச் சாயம் பூசுவதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்றனர். ஒன்றிய ஆட்சியாளர்களின் மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை தி.மு.க-விற்கு உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைப்பதா?
ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது “ என்று அவர் தெரிவித்துள்ளார்.