Advertisment

ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு: எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம்

author-image
WebDesk
New Update
ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு: எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தங்கள் தொகுதிகளில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய பிரச்சினைகளை தொகுத்து அந்த பட்டியலை  எம்.எல்.ஏக்கள் அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ”இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் 07.05.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மேலும் ஐந்து புதிய திட்டங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்ததைத் தங்களுக்கு அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம், மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான

அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள

குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள்,

வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள்.

இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள்,

மருத்துவ வசதிகள் பள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள்,

மின் மயானம், நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள். புதிய சுற்றுலாத் தளங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்.

எனவே, தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பத்து முக்கியமான கோரிக்கைகளை, தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் நீங்கள் ஆராய்ந்து, அவற்றினை முன்னுரிமைப்படுத்தி அந்தப் பரிந்துரைப் பட்டியலைத் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு உங்களை அன்புடன் இந்தக் கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்றத் தொகுதியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்டநாள் தேவைகள் இந்தப் புதிய முன்னோடி திட்டத்தின்கீழ் உங்கள் மூலமாக நிறைவேறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.

இது மட்டுமன்றி, மாவட்டங்களிடையே இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கும் இத்திட்டம் மிகுந்த பங்களிக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் நீங்கள் அளிக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் ” என்று அவர் குறிபிட்டுள்ளார்.

மேலும் மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்று  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment